கொரோனா பரிசோதனை வசதிகளை அதிகரிக்க வேண்டும் - மந்திரிகள் குழு சிபாரிசு


கொரோனா பரிசோதனை வசதிகளை அதிகரிக்க வேண்டும் - மந்திரிகள் குழு சிபாரிசு
x
தினத்தந்தி 8 April 2020 5:55 AM IST (Updated: 8 April 2020 5:55 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரிசோதனை வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்றும், மக்கள் கூடுவதை குட்டி விமானம் மூலம் கண்காணிக்க வேண்டும் என்றும் மந்திரிகள் குழு சிபாரிசு செய்துள்ளது.

புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் பரவலால் எழுந்துள்ள சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்து சிபாரிசு செய்வதற்காக, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் மந்திரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் 4-வது கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில், குழுவின் உறுப்பினர்களான மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், சதானந்த கவுடா, ராம்விலாஸ் பஸ்வான், நரேந்திரசிங் தோமர், ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், ஸ்மிரிதி இரானி, பிரகாஷ் ஜவடேகர், பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், பிரகலாத் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், கொரோனா வைரஸ் பரிசோதனை வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டது.

மத அமைப்புகளின் கூட்டங்களில் மக்கள் அதிக அளவில் திரள்வதாக கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. எனவே, ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் இத்தகைய சந்திப்புகளை கண்காணித்து தடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.

இடம்பெயர் தொழிலாளர்களுக்கு தங்குமிடமும், உணவும் அளிக்கப்பட்டதற்கு கூட்டத்தில் திருப்தி தெரிவிக்கப்பட்டது. வேளாண் பணிகளை அனுமதித்ததற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மேலும், கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோருக்கும், பாதுகாப்பு படையினருக்கும், அத்தியாவசிய பொருட்கள், உணவு, மருந்துகள் ஆகியவற்றை எடுத்துச் செல்லும் ஊழியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துகளையும், யோசனைகளையும் பிரதமர் மோடியிடம் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

Next Story