அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை"- மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்


அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை- மாநில அரசுகளுக்கு  அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 8 April 2020 3:44 PM IST (Updated: 8 April 2020 3:44 PM IST)
t-max-icont-min-icon

அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

புதுடெல்லி

கொரோனா  மற்றும் ஊரடங்கின் பின்னணியில் அத்தியாவசிய பொருள்கள் பதுக்கப்படுவதயும், அவை அதிக விலைக்கு விற்கப்படுவதையும் தடுக்கும் நோக்கில் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தை உடனே அமல்படுத்துமாறு அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 

இது தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை செயலர் அஜய் பல்லா கடிதம் அனுப்பியுள்ளார். அதில், அத்தியாவசிய பொருள்களை பதுக்குவோர், கள்ளச்சந்தையில் ஈடுபடுபவர்கள், அதிக விலை வைத்து மக்களை ஏமாற்றுபவர்கள் உள்ளிட்டோருக்கு 7 வருட சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் வகையில் கிரிமினல் நடவடிக்கைகளை எடுக்குமாறு, அவர் அறிவுறுத்தி உள்ளார்.

உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் மக்களுக்கு நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.ஊரடங்கு காலத்திலும் உணவு, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் உற்பத்தி, போக்குவரத்து ஆகியவை தடையின்றி நடக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

எனினும் இவை சந்தையில் போதிய அளவுக்கு கிடைக்காததால், அவை பதுக்கப்பட்டிருக்கலாம் என அரசு கருதுவதாகவும், அதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் உள்துறை செயலர் விளக்கம் அளித்துள்ளார்.

Next Story