ஒடிசா மாநிலத்தில் வரும் 30 - ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு


ஒடிசா மாநிலத்தில் வரும் 30 - ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
x
தினத்தந்தி 9 April 2020 12:28 PM IST (Updated: 9 April 2020 12:28 PM IST)
t-max-icont-min-icon

ஒடிசா மாநிலத்தில் வரும் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

புவனேஷ்வர்,

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும், கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மாநில முதல்-மந்திரிகளுடன் அவ்வப்போது காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். 

 ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றோடு 16 நாட்கள் ஆகியுள்ள போதிலும், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்தே வருகிறது.  இதனால், வரும் 14 -ஆம் தேதியோடு முடிவுக்கு வரும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்கள், நிபுணர்கள் தரப்பில் கோரிக்கை வலுத்து வருகின்றன. வரும் 11 ஆம் தேதி முதல் மந்திரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பான அறிவிப்பை  பிரதமர் மோடி வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ஒடிசாவில் வரும் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்  மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். ஒடிசாவில் நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  கல்வி நிலையங்கள் வரும் ஜூன் 17-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்றும் நவீன் பட்நாயக் அறிவித்தார். ஒடிசாவில் இதுவரை 42 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

ஒடிசாவில் கொரோனா பாதிப்பு பிற மாநிலங்களை விட குறைவாகவே உள்ள போதிலும், நாட்டிலேயே முதல் மாநிலமாக ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

Next Story