தென்கொரியாவை பின்பற்றி ஆமதாபாத்தில் கொரோனா கண்டறியும் பணி தீவிரம்
தென்கொரியா நாட்டை பின்பற்றி ஆமதாபாத் நகரில் கொரோனா பரவலை தடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஆமதாபாத்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உலகிலுள்ள ஒவ்வொரு நாடுகளும் அதன் சக்திக்கும், சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
தென்கொரியாவில் “தீவிர கண்காணிப்பு; தேடிச்சென்று சோதனை” என்ற திட்டத்தின் அடிப்படையில் கொரோனா பரவலை தடுக்கும் பணி முடுக்கிவிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி குறிப்பிட்ட நகரையோ அல்லது ஊரையோ சல்லடை போட்டு கண்காணித்து யாருக்கு எல்லாம் பிரச்சினை இருக்கிறதோ அவர்களை கண்டறிகிறார்கள். இன்னொரு புறம் வலியச்சென்று சந்தேகம் இருப்பவர்களுக்கு நோய் கண்டறியும் சோதனைகளை செய்து பாதிப்புக்கு உரியவர்களை தனிமைப்படுத்துகிறார்கள்.
தென்கொரியா நாட்டின் இந்த தடுப்புமுறை, நல்ல பலன்தர கூடும் என்பதால் குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகர நிர்வாகம் இதை பின்பற்றி, கொரோனா பாதித்தவர்களை கண்டறிந்து வருகிறது.
நகரின் மக்கள் தொகை 65 லட்சம் ஆகும். இதுவரை கொரோனா தாக்குதலுக்கு 6 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள். பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 141. வியாழக்கிழமை மட்டும் 58 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.
நகரில் நோய் ஆபத்துக்கான பகுதிகள் என்று 14 இடங்களை கண்டறிந்து, அங்கு மருத்துவ பணியாளர் நேரில் சென்று ரத்தமாதிரிகள் எடுத்து சோதனை செய்து வருகிறார்கள்.
கடந்த 4ந்தேதி வரை 57 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு இருந்ததாகவும் 8ந்தேதி அது 840 ஆக உயர்ந்து இருப்பதாகவும் நகர கமிஷனர் விஜய்நேரு தெரிவித்தார்.
கொரோனா பாதித்தவரை ஆரம்பநிலையில் கண்டறிந்துவிட்டால் 10 பேரின் உயிர்களை காப்பாற்ற முடியும் என்றும் கொரோனா தொற்று இருக்கும் ஒருவரை கண்டறிய தவறி விட்டால் அவரால் 400 பேருக்கு பரவ வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சொன்னார்.
Related Tags :
Next Story