ஊரடங்கின் பலன்களை கணக்கிட அடுத்த 4 வாரங்கள் மிக முக்கியமான காலம் - பிரதமர்
ஊரடங்கின் பலன்களை கணக்கிட அடுத்த 4 வாரங்கள் மிக முக்கியமான காலம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால், அதைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த மாதம் 24-ந் தேதி இரவு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது பிரதமர் மோடி இதை அறிவித்தார்.
ஊரடங்கு நடவடிக்கையைத் தொடங்கும் முன் மார்ச் 20-ந் தேதி மாநில முதல்-மந்திரிகளுடன் அவர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு கடந்த 2-ந் தேதியும் அவர் முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிரதமர் அறிவித்த 21 நாள் ஊரடங்கு வருகிற 14-ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
ஊரடங்கின் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 18 நாட்கள் ஆகிவிட்டன, என்றாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் மாநில முதல்-மந்திரிகளுடன் மீண்டும் பேசினார். அப்போது, நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவது பற்றியும், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். ஊரடங்கை மேலும் சில வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில முதல் மந்திரிகள் தரப்பில் பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஊரடங்கின் பலன்களைக் கணக்கிட அடுத்த 4 வாரங்கள் மிக முக்கியமான காலம் என்று தெரிவித்துள்ளார். மேலும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதை முதல்வர்கள் உறுதிப்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கையால் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது. அத்தியாவசிய மருந்துகள் போதிய கையிருப்பு உள்ளது” என்று கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், மருத்துவர்கள் உள்ளிட்டோர் மீது சில இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிரதமர் கண்டனம் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
Related Tags :
Next Story