மராட்டியத்தில் 30ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; கர்நாடகம், மேற்கு வங்காளமும் நீட்டித்தன


மராட்டியத்தில் 30ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; கர்நாடகம், மேற்கு வங்காளமும் நீட்டித்தன
x
தினத்தந்தி 12 April 2020 6:33 AM IST (Updated: 12 April 2020 8:10 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் வருகிற 30ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார். அதேபோல் கர்நாடகம் மற்றும் மேற்கு வங்காளமும் ஊரடங்கை நீட்டித்துள்ளன.

மும்பை,

நாட்டிலேயே மராட்டியம்தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. இங்கு நேற்றுவரை 1,666 பேர் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். 110 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வருகிற 14-ந்தேதி முடிவடையும் நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி நேற்று அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.  இதில் மராட்டிய முதல்- மந்திரி உத்தவ் தாக்கரேயும் கலந்து கொண்டார்.

இதை தொடர்ந்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வீடியோ மூலம் மாநில மக்களிடம் பேசினார். அப்போது மராட்டியத்தில் வருகிற 30-ந்தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மராட்டியத்தில் இந்த மாதம் 30-ந்தேதி வரை ஊரடங்கு தொடரும். இந்த காலக்கட்டத்தில் சில இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். மேலும் சில இடங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும்.

மராட்டியத்தில் 33 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் மும்பையில் மட்டும் 19 ஆயிரம் பேருக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொடக்கத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பற்றிய விவரங்களை விமான நிலையங்களில் சேகரிக்கவும், அவர்களுக்கு கொரோனா கண்டறியும் சோதனை நடத்தவும் மத்திய அரசு தவறிவிட்டது.

ஆனாலும் இந்த விஷயத்தில் நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. நாம் நிச்சயமாக கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்.  இவ்வாறு அவர் பேசினார்.

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியுடனான ஆலோசனைக்கு பிறகு கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.

இந்த ஊரடங்கு மிக தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் என்றும், மாநிலம் முழுவதும் கூடுதல் போலீஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும் எடியூரப்பா கூறினார்.

இந்த நிலையில் மராட்டியம் மற்றும் கர்நாடகத்தை தொடர்ந்து, மேற்கு வங்காளத்திலும் வருகிற 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்த மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “பிரதமர் மோடியுடனான ஆலோசனையின் போது கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த 2 வாரங்கள் மிக முக்கியமானவை என அவர் குறிப்பிட்டார். அதனை கருத்தில் கொண்டு ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது” என்றார்.

ஏப்ரல் மாத இறுதியில் நிலைமையை மறுபரிசீலனை செய்வோம் என்று கூறிய அவர், ஜூன் மாதம் 10-ந்தேதி வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்தார்.

Next Story