குடும்பத் தகராறால் 5 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய் - உத்தரபிரதேசத்தில் சோகம்


குடும்பத் தகராறால் 5 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய் - உத்தரபிரதேசத்தில் சோகம்
x
தினத்தந்தி 13 April 2020 4:47 AM IST (Updated: 13 April 2020 4:47 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் குடும்பத் தகராறால் 5 குழந்தைகளுடன் தாய் ஆற்றில் குதித்த சம்பவம் செரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ, 

உத்தரபிரதேச மாநிலம் பாதோகி மாவட்டம், ஜஹாங்கிராபாத் பகுதியைச் சேர்ந்தவர் மிருதுல் யாதவ். இவருடைய மனைவி முஞ்சு யாதவ் (வயது 36). இந்த தம்பதிக்கு ஆர்த்தி(11), சரஸ்வதி(7), ஷங்கர்(6), மாதேஸ்வரி(5) மற்றும் கேசவ்(3) என 3 பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கடந்த ஒரு வருடமாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்றுமுன்தினம் இரவிலும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த முஞ்சு தனது குழந்தைகளை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்வதென முடிவு செய்தார். அதன்படி குழந்தைகள் 5 பேரையும் வீட்டை விட்டு வெளியே அழைத்து சென்ற முஞ்சு, அந்த பகுதியில் ஓடும் கங்கை ஆற்றில் ஒவ்வொரு குழந்தையாக தூக்கி வீசினார். தந்தையுடன் ஏற்பட்ட சண்டையால் தாய் தங்களை எங்கேயோ பாதுகாப்பாக அழைத்து செல்கிறாள் என்று எண்ணி உடன் சென்ற குழந்தைகள், ஆற்றில் தூக்கி வீசும்போது பயத்தில் அலறினர். ஆனாலும் முஞ்சு தனது மனதை கல்லாக்கிக்கொண்டு 5 குழந்தைகளையும் அடுத்தடுத்து ஆற்றில் வீசினார்.

இதையடுத்து தற்கொலை செய்யும் முடிவோடு முஞ்சுவும் ஆற்றில் குதித்தார். ஆனால் உள்ளே குதித்து தத்தளித்தபோது ஏற்பட்ட அச்சத்தால் அவர் நீந்தி கரையை வந்தடைந்தார். பின்னர் விடியும் வரை அங்கேயே நின்றிருந்த முஞ்சு, அதிகாலையில் நடந்த சம்பவம் பற்றி அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார்.

உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முஞ்சு குழந்தைகளை ஆற்றில் வீசிய இடம் மிகவும் ஆழமான பகுதி என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story