மராட்டியத்தில் எம்.எல்.சி. பதவிகளுக்கான தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி


மராட்டியத்தில் எம்.எல்.சி. பதவிகளுக்கான தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி
x
தினத்தந்தி 1 May 2020 12:54 PM IST (Updated: 1 May 2020 12:54 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் எம்.எல்.சி. பதவிகளுக்கான தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

புனே,

மராட்டியத்தில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் பாரதீய ஜனதா உடனான கூட்டணியை முறித்து, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனார்.

எம்.எல்.ஏ.வாகவோ அல்லது எம்.எல்.சி.யாகவோ இல்லாமல் பதவி ஏற்ற உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக பதவி நீடிப்பதற்கு அரசியலமைப்பு விதியின்படி 6 மாதத்திற்குள் அதாவது மே 28-ந் தேதிக்குள் மேற்கண்ட ஏதாவது ஒரு பதவிக்கு தேர்வாக வேண்டும்.

அவர் முதல்-மந்திரியாக பதவி ஏற்று 5 மாதங்கள் முடிந்த நிலையில், இன்னும் எம்.எல்.ஏ.வாகவோ அல்லது எம்.எல்.சி.யாகவோ ஆகாமல் இருக்கிறார்.

மாநிலத்தில் காலியாக உள்ள 9 எம்.எல்.சி. பதவிகளுக்கு கடந்த 24-ந் தேதி நடைபெற இருந்த தேர்தல் மூலம் எம்.எல்.சி. ஆக தேர்வாகி முதல்-மந்திரி பதவியை தக்க வைத்து கொள்ளலாம் என உத்தவ் தாக்கரே கருதிய நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக அந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

இதையடுத்து கவர்னரின் ஒதுக்கீட்டின் கீழ் காலியாக இருக்கும் எம்.எல்.சி. பதவியில் உத்தவ் தாக்கரேயை நியமிக்க வலியுறுத்தி மாநில மந்திரிசபை 2 முறை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு பரிந்துரை செய்தது.  இது தொடர்பாக ஆளும் மகா விகாஷ் கூட்டணி தலைவர்களும் கவர்னரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்கள்.

ஆனால் கவர்னர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், இந்த விவகாரத்தில் தலையிடக்கோரி உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடியை போனில் தொடர்பு கொண்டு முறையிட்டார்.  இந்தநிலையில், கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட 9 எம்.எல்.சி. பதவிகளுக்கும் தேர்தல் அறிவிக்க கோரி இந்திய தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதனை ஏற்று மராட்டியத்தில் எம்.எல்.சி. பதவிகளுக்கான தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.  நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.  இதனால், மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தனது பதவியை தக்க வைத்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Next Story