ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 5 வீரர்கள் வீர மரணம்: தியாகத்தை என்றும் மறக்க மாட்டோம் - ராஜ்நாத் சிங்


ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 5 வீரர்கள் வீர மரணம்: தியாகத்தை என்றும் மறக்க மாட்டோம் - ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 3 May 2020 2:28 PM IST (Updated: 3 May 2020 2:28 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த துப்பாக்கி சண்டையில் 4 இந்திய ராணுவ வீரர்கள் ஒரு போலீஸ் உயரதிகாரி உள்பட 5 பேர் வீர மரணம் அடைந்தனர்.

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் எல்லை வழியாக ஊடுருவி இந்திய பாதுகாப்பு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 70 கி.மீ தூரத்தில் உள்ள வடக்கு காஷ்மீரில் மாவட்டத்தின் ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இதில், இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேநேரத்தில், இந்த துப்பாக்கிச்சூட்டில் கர்னல், மேஜர் உள்ளிட்ட 4 ராணுவ வீரர்கள் மற்றும் காஷ்மீர் காவல்துறை சப் - இன்ஸ்பெக்டர் என மொத்தம் 5 பேர் வீர மரணம் அடைந்தனர். 

இந்த தாக்குதலால் அப்பகுதி மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு தொடங்கிய இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் சுமார் 8 மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது.

ஹந்த்வாராவின் சங்கிமுலில் இருந்த ஒரு வீட்டில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருந்ததாகவும், இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து தீவிரவாதிகள் குறித்து சோதனை செய்ததாகவும் பாதுகாப்புப்படையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் குறித்த தகவல் புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து வந்ததாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த கமான்டிங் அதிகாரியான கர்னல் அஷுடோஷ் ஷர்மா, இதற்கு முன்பு பல வெற்றிகரமான தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இதற்காகவும், பல பொது மக்களின் உயிரைக் காப்பாற்றியதற்காகவும் அவர் இரு கேலண்டரி விருதுகளைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டுவீட் செய்துள்ள பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்,

ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்புப்படை வீரர்களின் உயிரிழப்பு தனக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். அவர்களின் தைரியம் மற்றும் தியாகத்தை என்றும் மறக்க மாட்டோம் என்றும், தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். இன்று தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துணிச்சலான தியாகிகளின் குடும்பங்களுக்கு இந்தியா எப்போதும் தோளோடு தோள் நிற்கும்.

 அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story