ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு - தேசிய மகளிர் ஆணையம் தகவல்
ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரித்து இருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
கொரோனா பரவலை தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், மக்கள் வெளியே நடமாட முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் குடும்ப வன்முறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க 7217735372 என்ற வாட்ஸ் அப் எண்ணை தேசிய மகளிர் ஆணையம் அறிவித்து உள்ளது.
இந்த எண்ணுக்கு ஏராளமான புகார்கள் வந்து உள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 800 புகார்கள் வந்து இருப்பதாக தேசிய மகளிர் ஆணைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் தொடர்பாக ஏப்ரல் மாதத்தில் ஆன்லைன், வாட்ஸ் அப் மூலம் 315 புகார்கள் வந்து இருப்பதாக தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா தெரிவித்து இருக்கிறார். இது மொத்த புகார்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் ஆகும்.
முந்தைய சில மாதங்களை விட ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகரித்து இருப்பது தெரியவந்து உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன் ஆன்லைன் மற்றும் தபால்கள் மூலம் புகார்கள் பெறப்பட்டு வந்தன. திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி பெற்றோர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக ஒரு பெண் புகார் அனுப்பி இருந்ததாகவும், இதைத்தொடர்ந்து தேசிய மகளிர் ஆணைய அதிகாரிகள் அந்த பெண் வசிக்கும் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு இதுபற்றி தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, போலீசார் அந்த பெண்ணை மீட்டு காப்பகத்தில் சேர்த்ததாகவும் மகளிர் ஆணைய உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இதேபோல் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தனது சகோதரியை வெளியே செல்லவிடாமல் வீட்டில் அடைத்து வைத்து மைத்துனர்கள் துன்புறுத்துவதாக மகளிர் ஆணையத்துக்கு புகார் அனுப்பியதை தொடர்ந்து, அந்த பெண்ணும் போலீசாரால் மீட்கப்பட்டதாக மகளிர் ஆணை உறுப்பினர் கூறினார். இதேபோல் மேலும் பல புகார்கள் வந்து இருப்பதாகவும், அந்த புகார்கள் மீது போலீசாரின் உதவியுடன் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story