வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வரும் பணி 7-ந் தேதி தொடங்குகிறது - மத்திய அரசு அறிவிப்பு
வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வரும் பணி 7-ந் தேதி தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வெளிநாடுகளில் சிக்கித் தவித்து, தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களை படிப்படியாக மீட்டு அழைத்து வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வருகிற 7-ந் தேதி பயணம் தொடங்குகிறது. இதற்காக, தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்கள் பட்டியலை இந்திய தூதரகங்கள் தயாரித்துள்ளன. கட்டண அடிப்படையில் இந்த வசதி அளிக்கப்படுகிறது. வர்த்தக விமானம் ஏற்பாடு செய்யப்படும்.
விமானத்தில் ஏறுவதற்கு முன்பு, ஒவ்வொருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும். கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவர். விமானத்தில், மத்திய சுகாதார அமைச்சகம், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஆகியவை வகுத்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
அவரவர் இருப்பிடத்தை அடைந்தவுடன், ஒவ்வொருவரும் ‘ஆரோக்ய சேது’ செயலியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அங்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும். பின்னர், ஆஸ்பத்திரியிலோ அல்லது முகாமிலோ அவர்கள் கட்டண அடிப்படையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். 14 நாட்களுக்கு பிறகு, கொரோனா பரிசோதனை நடத்தப்படும். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுதொடர்பான விவரங்களை வெளியுறவு அமைச்சகமும், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகமும் விரைவில் தங்கள் இணையதளத்தில் வெளியிடும். பரிசோதனை, தனிமைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளை மாநில அரசுகள் செய்ய வேண்டும். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
Related Tags :
Next Story