சொந்த ஊர்களுக்கு செல்லும் வெளிமாநில தொழிலாளர்களின் ரெயில் பயண செலவை காங்கிரஸ் ஏற்கும் - சோனியா காந்தி அறிவிப்பு


சொந்த ஊர்களுக்கு செல்லும் வெளிமாநில தொழிலாளர்களின் ரெயில் பயண செலவை காங்கிரஸ் ஏற்கும் - சோனியா காந்தி அறிவிப்பு
x
தினத்தந்தி 5 May 2020 4:00 AM IST (Updated: 5 May 2020 4:00 AM IST)
t-max-icont-min-icon

சொந்த ஊர்களுக்கு செல்லும் வெளிமாநில தொழிலாளர்களின் ரெயில் பயண செலவை காங்கிரஸ் ஏற்கும் என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறி உள்ளார்.

புதுடெல்லி,

ஊரடங்கின் காரணமாக பல்வேறு மாநிலங்களில் சிக்கி தவிக்கும் வெளி மாநில தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க கடந்த 1-ந்தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தொழிலாளர்களை ஏற்றிச் செல்வதற்கான ரெயில் கட்டணத்தை அவர்களிடம் இருந்து அவர்களை அனுப்பி வைக்கும் மாநிலங்கள் வசூலித்து வழங்க வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

ஊரடங்கின் காரணமாக பல்வேறு மாநிலங்களில் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன், சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் விஷயத்தில் மத்திய அரசு பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு விமானத்தில் கட்டணம் இன்றி அழைத்து வருவதில் அக்கறை காட்டும் மத்திய அரசு, வெளிமாநில தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு ரெயிலில் கட்டணம் இன்றி அனுப்பி வைத்திருக்கவேண்டும். ஏழை தொழிலாளர்கள் பணம் இன்றி தவிக்கிறார்கள். இந்த நெருக்கடியான கால கட்டத்தில் மத்திய அரசும், ரெயில்வேயும் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறது.

தொழிலாளர்கள் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குபவர்கள். அவர்களுடைய கடின உழைப்பு, தியாகம்தான் தேசத்தின் ஆதாரமாக விளங்குகிறது. 1947-ம் ஆண்டு ஏற்பட்ட பிரிவினைக்கு பிறகு இப்போதுதான் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு கால்நடையாக செல்லும் அவலநிலை ஏற்பட்டதை காண்கிறோம். எனவே தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கான ரெயில் கட்டண செலவை அவர்களை அனுப்பி வைக்கும் மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் கமிட்டி ஏற்றுக்கொள்ளும்.

இவ்வாறு அதில் சோனியா காந்தி கூறி உள்ளார்.

இதேபோல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வெளிமாநிலங்களில் தவிக்கும் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு ரெயிலில் ஏற்றிச்செல்ல ஒருபுறம் கட்டணம் வசூலிக்கும் ரெயில்வே நிர்வாகம் மற்றொரு புறம் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி நன்கொடை வழங்குகிறது புதிராக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

இதுபற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணு கோபால், தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜே வாலா ஆகியோர் கூறுகையில், சொந்த மாநிலத்துக்கு செல்ல டிக்கெட் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் தொழிலாளர்கள் இருப்பதால், அவர்களுடைய பயண செலவை ஏற்றும் வகையில் இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை காங்கிரஸ் எடுத்து இருப்பதாகவும், தொழிலாளர்கள் எந்த மாநிலங்களில் இருந்து செல்கிறார்களோ அந்த மாநில காங்கிரஸ் கமிட்டி அவர்களுடைய பயண கட்டண தொகையை செலுத்தும் என்றும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் ரெயில்வே அதிகாரிகளுடன் பேசுமாறு மாநில காங்கிரஸ் கமிட்டிகள் கேட்டுக்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அந்த வகையில் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி அந்த மாநில தலைமைச் செயலாளரிடம் ரூ.1 கோடி செலுத்தி இருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள். இந்த விஷயத்தில் மத்திய அரசும், ரெயில்வேயும் தங்கள் போக்கை மாற்றிக்கொண்டு தொழிலாளர்களை கட்டணம் இன்றி அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தொழிலாளர்களின் பயண செலவை ஏற்குமாறு மாநில காங்கிரஸ் கமிட்டிகளுக்கு உத்தரவிட்டு சோனியா காந்தி எடுத்த முடிவு குறித்து மத்திய அரசு வெட்கப்படவேண்டும் என்று முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் கூறி உள்ளார்.

வெளிமாநில தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்வதாக பாரதீய ஜனதா குற்றம்சாட்டி உள்ளது. தொழிலாளர்களை அனுப்பி வைப்பதற்கான செலவை மத்திய, மாநில அரசுகள் ஏற்றுக்கொள்வதாகவும், தொழிலாளர்களிடம் இருந்து டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்றும் அந்த கட்சி கூறி உள்ளது.

Next Story