பிரதமர் நிதி திட்டத்தில் 500 ரூபாயை வங்கியில் எடுக்க 30 கி.மீட்டர் நடந்து சென்ற பெண் - ஏமாற்றத்துடன் திரும்பிய பரிதாபம்


பிரதமர் நிதி திட்டத்தில் 500 ரூபாயை வங்கியில் எடுக்க 30 கி.மீட்டர் நடந்து சென்ற பெண் - ஏமாற்றத்துடன் திரும்பிய பரிதாபம்
x
தினத்தந்தி 5 May 2020 5:45 AM IST (Updated: 5 May 2020 5:26 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் நிதி திட்டத்தில் 500 ரூபாயை வங்கியில் சென்று எடுக்க, ஒரு பெண் 30 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, ஏமாற்றத்துடன் திரும்பினார்.

ஆக்ரா,

உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்தில் கிம்மத்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், கர்வீர். அவருடைய மனைவி ராதா தேவி (வயது 50) அவர்களுக்கு 15 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவர்கள் ஆக்ரா அருகே உள்ள சாம்பு நகர் பகுதியில் வசித்து வருகிறார்கள். கூலி வேலை செய்துவரும் அவர்கள், அந்த வேலைக்காக சொந்த ஊரைவிட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே குடிபெயர்ந்து அந்தப் பகுதிக்கு வந்துவிட்டனர்.

இந்த நிலையில் அவர்கள் வசித்து வரும் குடிசைப் பகுதியில், ஒரு செய்தி பரவியது. ஏழை எளிய மக்களுக்கு பிரதம மந்திரி ‘ஜன்தன் யோஜனா‘ திட்டத்தின் கீழ் ரூ.500 வங்கி கணக்குகளில் போடப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. அதைக் கேட்டு ராதாதேவி மகிழ்ச்சி அடைந்தார். அவருக்கு சொந்த ஊர் அருகே பச்சோகரா என்ற இடத்தில் இருக்கும் ஸ்டேட் வங்கியில் கணக்கு உள்ளது.

அங்கு சென்று ரூ.500ஐ எடுத்துவர முடிவு செய்தார். அவர் தற்போது குடியிருக்கும் இடத்திலிருந்து வங்கி இருக்கும் இடத்திற்கு 30 கிலோ மீட்டர் தூரம் ஆகும். ஊரடங்கு இருப்பதால் பஸ்கள் ஓடவில்லை. இருந்தாலும் நடந்தே சென்றாவது பணத்தை எடுத்துவர தீர்மானித்தார்.

ராதாதேவிக்கு நிமிர்ந்து நடக்க முடியாது. கூன் முதுகு. அதைப் பொருட்படுத்தாமல், தன்னுடைய 15 வயது மகனை துணைக்கு அழைத்துக் கொண்டு 30 கி.மீட்டர் நடந்தே வங்கிக்கு சென்றார். வங்கிக்கு சென்றதும் அங்கு, சியாம் பதக் என்ற ஊழியரிடம், விபரத்தை சொல்லி, ரூ.500ஐ எடுக்க வேண்டும் என்றார். வங்கிக் கணக்கை சரிபார்த்த அந்த ஊழியர், அதில் ஏதும் பணம் இல்லை. உங்கள் கணக்கு பிரதம மந்திரி ஜன்தன் திட்டத்தோடு இணைக்கப்படவில்லை என்பதை தெரிவித்தார். அதைக் கேட்ட ராதாதேவி ஏமாற்றம் அடைந்தார்.

“கடந்த 2 மாதங்களாக உடல்நிலை சரியில்லை. வேலைக்கும் செல்லவில்லை“ என்று வருத்தத்தோடு அவர் சொன்னார். இதனால் இரக்கம் அடைந்த வங்கி ஊழியர், தான் வைத்திருந்த பணத்தில் கொஞ்சம் ராதாதேவிக்கு கொடுத்து, வீடு திரும்புமாறு அவரை அனுப்பிவைத்தார். அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, மகனையும் அழைத்துக்கொண்டு ராதாதேவி, மீண்டும் 30 கிலோ மீட்டர் தூரம் நடந்து வீடு போய்ச் சேர்ந்தார்.

வரும்போது 30 கிலோ மீட்டர் தூரமும், போகும் போது 30 கிலோ மீட்டர் தூரமும், ஆக மொத்தம் 60 கிலோ மீட்டர் தூரம் நடந்து இருக்கிறார். ஆங்காங்கே ஓய்வெடுத்து சுமார் 15 மணி நேரம் அவர் நடந்து இருக்கிறார். அவர் ஏமாற்றத்துடன் வங்கியில் இருந்து திரும்பிய தகவல் சமூக வலைத் தளத்தில் வைரலாக பரவியது.

Next Story