உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் ரூ.225 கோடிக்கு மது விற்பனை - கர்நாடகத்தில் ரூ.45 கோடிக்கு விற்பனையானது


உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் ரூ.225 கோடிக்கு மது விற்பனை - கர்நாடகத்தில் ரூ.45 கோடிக்கு விற்பனையானது
x
தினத்தந்தி 5 May 2020 11:45 PM GMT (Updated: 6 May 2020 12:13 AM GMT)

உத்தரபிரதேச மாநிலத்தில் 40 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மதுக்கடைகள் திறக்கப்பட்டதையடுத்து ஒரே நாளில் ரூ.225 கோடிக்கு மது விற்பனை ஆனது.

லக்னோ, 

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அன்று முதல் அனைத்து மாநிலங்களிலும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மது விற்பனையை தொடங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

அதன் அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலத்தில் 40 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதையொட்டி ‘குடி’மகன்கள் மது வாங்குவதற்காக கடைகளை நோக்கி படை எடுத்தனர்.

ஊரடங்கு விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டு, மதுக்கடைகள் இருக்கும் இடமெல்லாம் கூட்டம் அலைமோதியது. மதுப்பிரியர்கள் கையில் இருந்த பணத்தை எல்லாம் மதுக்கடைகளில் கொண்டுவந்து குவித்தனர். இதனால் ஒருநாளில் மட்டும் ரூ.225 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக அம்மாநில கலால் துறை அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு விழா காலத்தில் அங்கு ஒரே நாளில் ரூ.125 கோடிக்கு விற்பனையானதே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை தற்போது ஊரடங்கால் குடிக்க முடியாமல் தவித்து வந்தவர்கள் முறியடித்து விட்டார்கள். உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் மட்டும் ரூ.6 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கர்நாடக மாநிலத்திலும் 40 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மதுப்பிரியர்கள் அதிகாலையிலேயே கடைகள் முன்பு திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி சென்றனர்.

ஆண்களுக்கு இணையாக பெண்களும் போட்டி போட்டு மதுபானங்களை வாங்கி சென்றதை காண முடிந்தது. அங்கு நேற்று முன்தினம் ஒரு நாளில் மட்டும் ரூ.45 கோடிக்கு மது விற்பனையானதாக அந்த மாநில கலால் துறை தெரிவித்தது.

Next Story