கர்நாடகாவில் 2வது நாளில் ரூ.197 கோடிக்கு மது விற்பனை; நீண்ட வரிசையில் நின்ற பெண்கள்


கர்நாடகாவில் 2வது நாளில் ரூ.197 கோடிக்கு மது விற்பனை; நீண்ட வரிசையில் நின்ற பெண்கள்
x
தினத்தந்தி 6 May 2020 7:43 AM IST (Updated: 6 May 2020 7:43 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் ஊரடங்கு தளர்வின் 2வது நாளில் ரூ.197 கோடி அளவுக்கு மதுபானம் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

பெங்களூரு,

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  பின்னர் இந்த உத்தரவு கடந்த ஏப்ரல் 14ந்தேதி நீட்டிக்கப்பட்டது.  இதனால் கடந்த மே 3ந்தேதி வரை 19 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தது.

எனினும், கொரோனா பரவலின் தீவிரம் குறையாத நிலையில், மீண்டும் 2வது முறையாக ஊரடங்கு 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.  ஊரடங்கு அமலான நிலையில், அன்று முதல் அனைத்து மாநிலங்களிலும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மது விற்பனையை தொடங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

கர்நாடக மாநிலத்திலும் 40 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மதுப்பிரியர்கள் அதிகாலையிலேயே கடைகள் முன்பு திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி சென்றனர்.

ஆண்களுக்கு இணையாக பெண்களும் போட்டி போட்டு நீண்ட வரிசையில் முக கவசங்களை அணிந்தபடி, சமூக இடைவெளியை முறையாக பின்பற்றி, மதுபானங்களை வாங்கி பைகளில் போட்டு கொண்டு சென்றதை காண முடிந்தது. அங்கு நேற்று முன்தினம் ஒரு நாளில் மட்டும் ரூ.45 கோடிக்கு மது விற்பனையானதாக அந்த மாநில கலால் துறை தெரிவித்தது.

இதனை தொடர்ந்து நேற்றும் விற்பனை சூடு பிடித்தது.  இதுபற்றி கலால் துறை உயரதிகாரிகள் கூறும்பொழுது, ‘இந்தியாவில் தயாரான மதுபானம் 36.37 லட்சம் லிட்டர் அளவில் 4.21 லட்சம் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.  இதனால் ரூ.182 கோடி வருவாய் கிடைத்து உள்ளது.

இதேபோன்று 7.02 லட்சம் லிட்டர் அளவிலான பீர் 90 ஆயிரம் பெட்டிகள் வரை விற்று தீர்ந்துள்ளன.  இதனால் ரூ.15 கோடி அளவிற்கு வருவாய் கிடைத்து உள்ளது’ என தெரிவித்து உள்ளனர்.

‘முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் மது விற்பனையில் சாதனை படைத்து உள்ளது’ என பெயர் வெளியிட விருப்பமில்லாத அதிகாரியொருவர் தெரிவித்து உள்ளார்.  இதனால் கர்நாடகாவில் ஊரடங்கு தளர்வின் 2வது நாளில் ரூ.197 கோடி அளவுக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது.

Next Story