கொரோனா ஊரடங்கு: சும்மா இருப்பதால் ஆபாச இணையதளங்களில் மூழ்கும் இந்தியர்கள்; பார்ப்பது 95% அதிகரிப்பு


கொரோனா ஊரடங்கு: சும்மா இருப்பதால் ஆபாச இணையதளங்களில் மூழ்கும் இந்தியர்கள்; பார்ப்பது 95% அதிகரிப்பு
x
தினத்தந்தி 6 May 2020 5:32 PM IST (Updated: 6 May 2020 5:32 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கில் சும்மா இருப்பதால் ஆபாச இணையதளங்களில் மூழ்கும் இந்தியர்கள்; ஊரடங்கில் 95 சதவீதம் ஆபாச இணையதளம் பார்ப்பது அதிகரித்து உள்ளது.

புதுடெல்லி

உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இருந்தபோதிலும் கொரோனாவின் கோர தாண்டவம் இன்னும் குறையாததால் 3-வது கட்டமாக வருகிற 17-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு  மூன்றாம் கட்டத்திற்கு இந்தியா தயாராகி வருவதால்,  அலுவலகங்கள்  மூடப்பட்டு உள்ளன. லட்சகணக்கான பேர் வீட்டிலிருந்து வேலை செய்து வருகின்றனர்.  நாடு முழுவதும் பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.வெளியிலும் நடமாட முடியவில்லை  இதனால்  நாடு முழுவதும்  ஆபாச இணையதளங்களை  பார்ப்பவர்களின் எண்ணிக்கையில் கூர்மையான உயர்வு ஏற்பட்டு உள்ளது.

சமீபத்திய கணக்கெடுப்பின்படி, ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் ஆபாச இணையதளங்களை பார்ப்பது கிட்டத்தட்ட 95 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், 89 சதவீத மக்கள் தங்கள் செல்போன்களில் ஆபாச வலைத்தளங்களை பார்க்கிறார்கள். மேலும், கிட்டத்தட்ட 30-40 சதவீதத்தினர் பகலில் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். நாட்டில் 3,500 க்கும் மேற்பட்ட ஆபாச வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் இது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன

ஆனால் இளம்பருவத்திற்கு முந்தையவர்கள் ஆபாச இணையதளங்களை பார்ப்பது அதிகரித்து வருவது கவலைக்குரியதாகிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூரில் உள்ள 10 பள்ளிகளில் 400 மாணவர்களிடையே ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. குறைந்த பட்சம் 70 சதவீத மாணவர்கள் 10 வயதை எட்டியவுடன் இணையத்தில் ஆபாச இணையதளங்களை பார்க்கத் தொடங்கியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

வேலோசிட்டி எம்.ஆர் என்ற ஆராய்ச்சி நிறுவன தகவல் படி  இந்தியாவில் பெரிய நகரங்களில் வசிக்கும் பெற்றோர்களில் 90 சதவீதம் பேர் இணையம் தங்கள் குழந்தைகளுக்கு  படிப்பில் உதவுகிறது என்று நினைக்கிறார்கள். 10 பேரில் 9 பேராவது தங்கள் குழந்தை இணையத்தை படிப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்றும் ஆபாச உள்ளடக்கத்தையும் காணவில்லை என்றும் நம்புகிறார்கள். 

மலிவான விலையில் இணைய வசதி கிடைப்பது இந்தியாவுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது, ஆனால் அதே நேரத்தில் இளம் தலைமுறையினரும் மாணவர்களும் இந்த வலையில் சிக்கி இரையாகி வருகிறார்கள், இதனால் ஆழமாக பாதிக்கும் ஒரு மனநோயை உருவாக்க முடியும்.

இருப்பினும், ஆபாச இணையதளங்களை பார்ப்பதில் இந்தியா உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது, ஆபாச இணையதளங்களை அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் மிகவும் அதிகம் பார்க்கப்படுகிறது.

Next Story