115 சிறப்பு ரெயில்கள் மூலம் 1 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றனர் - ரெயில்வே நிர்வாகம் தகவல்


115 சிறப்பு ரெயில்கள் மூலம் 1 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றனர் - ரெயில்வே நிர்வாகம் தகவல்
x
தினத்தந்தி 7 May 2020 1:15 AM IST (Updated: 7 May 2020 1:08 AM IST)
t-max-icont-min-icon

115 சிறப்பு ரெயில்கள் மூலம் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமான வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று இருப்பதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ள தகவல்கள் வருமாறு:-

புதுடெல்லி, 

பல்வேறு மாநிலங்களில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக மே 1-ந் தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதுவரை 115 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு உள்ளன. நேற்று மட்டும் 42 ரெயில்கள் இயக்கப்பட்டன.

இந்த ரெயில்கள் மூலம் 1 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

24 பெட்டிகளை கொண்ட ரெயில்களில் ஒவ்வொரு பெட்டியிலும் 72 இருக்கைகள் உள்ள போதிலும், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 54 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

அடுத்த 5 நாட்கள் கர்நாடகத்தில் இருந்து இயக்கப்பட இருந்த 5 சிறப்பு ரெயில்களை அந்த மாநில அரசு ரத்து செய்து உள்ளது.

அதிகபட்சமாக கடந்த செவ்வாய்க்கிழமை வரை குஜராத்தில் இருந்து மட்டும் 35 ரெயில்கள் இயக்கப்பட்டு இருக்கின்றன. கேரளாவில் இருந்து 11 ரெயில்கள் விடப்பட்டன. பீகார், உத்தரபிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கு அதிக ரெயில்கள் சென்று உள்ளன.

தொழிலாளர்களை ஏற்றிச் செல்வதற்கான பயண கட்டணத்தில் 85 சதவீதத்தை ரெயில்வேயும், மீதி 15 சதவீதத்தை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் ஏற்றுக் கொள்வதாக மத்திய அரசு கூறி உள்ளது. ஒரு சிறப்பு ரெயிலை இயக்க ரூ.30 லட்சம் செலவாகிறது என்று ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Next Story