ஆந்திராவில் ரசாயன ஆலையில் வாயு கசிவு; 1 குழந்தை உள்பட 5 பேர் பலி


ஆந்திராவில் ரசாயன ஆலையில் வாயு கசிவு; 1 குழந்தை உள்பட 5 பேர் பலி
x
தினத்தந்தி 7 May 2020 10:26 AM IST (Updated: 7 May 2020 10:26 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திர பிரதேசத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயு கசிவால் மூச்சு திணறி 1 குழந்தை உள்பட 5 பேர் பலியாகினர்.

விசாகப்பட்டினம்,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன.

ஆந்திர பிரதேசத்தில் விசாகப்பட்டினம் நகரில் ஆர்.ஆர். வேங்கடாபுரம் கிராமத்தில் தனியார் ரசாயன தொழிற்சாலை ஒன்று உள்ளது.  ஊரடங்கால் ஆலை மூடப்பட்டு உள்ளது.  இந்நிலையில், திடீரென இதில் இருந்து ஸ்டைரீன் என்ற ரசாயன வாயு கசிந்துள்ளது.  இதனால் அந்த பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு கண்களில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டதுடன், சுவாச பாதிப்புகளும் ஏற்பட்டன.

இதனை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.  இதன் பாதிப்பு 1 முதல் 1.5 கி.மீ. தொலைவுக்கு ஏற்பட்டு உள்ளது.  வாயு பரவல் 2 முதல் 2.5 கி.மீ. தொலைவு வரை சென்றுள்ளது.  கிராமத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

அந்த பகுதியில் உள்ள 120 பேர் வரை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.  இதுபற்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவு பற்றிய தகவல் அறிந்த முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும்படியும், மக்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கும் அவர் செல்கிறார்.

இந்த விபத்தில் 1 குழந்தை உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர்.  தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

Next Story