ஆந்திரா விஷவாயு விபத்து; குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்
ஆந்திராவில் நடந்த விஷவாயு விபத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு அமலில் உள்ளது. ஆந்திர பிரதேசத்தில் விசாகப்பட்டினம் நகரில் ஆர்.ஆர். வேங்கடாபுரம் கிராமத்தில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலை ஊரடங்கால் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென ஆலையில் இருந்து ஸ்டைரீன் என்ற ரசாயன வாயு கசிந்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு கண்களில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டதுடன், சுவாச பாதிப்புகளும் ஏற்பட்டன.
இந்த விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர். கிராமத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அந்த பகுதியில் உள்ள 120 பேர் வரை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
விஷவாயு விபத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில், பல உயிர்களை பலி கொண்ட விசாகப்பட்டினம் அருகே நடந்த விஷவாயு கசிவு விபத்து பற்றி அறிந்து வருத்தமடைந்தேன்.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். அனைவரது பாதுகாப்பிற்காகவும் மற்றும் காயமடைந்தோர் குணமடையவும் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story