இதுவரை 163 சிறப்பு ரெயில்கள் இயக்கம் - 1½ லட்சம்பேர் சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டனர்
இதுவரை 163 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. அவற்றின் மூலம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
புதுடெல்லி,
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்து செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது. மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று ரெயில்வே நிர்வாகம், சிறப்பு ரெயில்களை இயக்க முன்வந்தது.
கடந்த 1-ந் தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. நேற்று முன்தினம் 56 சிறப்பு ரெயில்களும் நேற்று மதியம்வரை 14 சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டன.
இத்துடன், இதுவரை 163 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இவை தலா 24 பெட்டிகள் கொண்ட ரெயில்கள் ஆகும். ஒவ்வொரு பெட்டியிலும் வழக்கமாக 72 இருக்கைகள் இருக்கும். ஆனால், சமூக இடைவெளியை பின்பற்றும்வகையில், நடுஇருக்கையை காலியாக விட்டு, ஒவ்வொரு பெட்டியிலும் 54 பேர் மட்டும் ஏற்றிச் செல்லப்பட்டனர்.
குஜராத், கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக ரெயில்கள் புறப்பட்டுள்ளன. பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அதிக ரெயில்கள் சென்றடைந்துள்ளன.
ஒவ்வொரு சேவைக்கும் ரெயில்வே ரூ.80 லட்சம் செலவிடுவதாக தெரிகிறது. மத்திய அரசு 85 சதவீத செலவையும், மாநில அரசுகள் 15 சதவீத செலவையும் ஏற்று வருகின்றன.
Related Tags :
Next Story