விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் மீண்டும் விஷவாயு கசிந்ததாக வதந்தி


விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் மீண்டும் விஷவாயு கசிந்ததாக வதந்தி
x
தினத்தந்தி 8 May 2020 11:00 PM GMT (Updated: 8 May 2020 10:29 PM GMT)

விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மீண்டும் விஷவாயு கசிவு ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது.

விசாகப்பட்டினம்,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் என்ற ரசாயன ஆலை உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை அந்த ஆலையில் இருந்து விஷவாயு கசிந்தது. இதில், 11 பேர் பலியானார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்

இதற்கிடையே, ஆலையில் மீண்டும் விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் 5 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் மக்களை போலீசார் வெளியேறச் சொல்வதாகவும் நேற்று முன்தினம் நள்ளிரவு சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது.இதையடுத்து, நள்ளிரவு 1 மணி அளவில், ஆலைக்கு அருகே உள்ள 5 கிராமங்களை சேர்ந்த மக்கள், தங்கள் வீடுகளை விட்டு அலறி அடித்துக்கொண்டு வெளியேறினர்.

கார்கள், இருசக்கர வாகனங்களில் மட்டுமின்றி கால்நடையாகவும் வெளியேறினர்.

இந்நிலையில், அதிகாலை 3.30 மணியளவில், போலீசார் சாலைகளில் தஞ்சம் அடைந்திருந்த மக்களை வீட்டுக்கு திரும்புமாறு ஒலிபெருக்கி மூலம் கேட்டுக்கொண்டனர். பீதியடைய வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். அதன்பிறகு பொதுமக்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

Next Story