கூடுதலாக ரூ.4.2 லட்சம் கோடி கடன் பெறும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ப.சிதம்பரம் வரவேற்பு
கூடுதலாக ரூ.4.2 லட்சம் கோடி கடன் பெறும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு முன்னாள் நிதி-மந்திரி ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னை,
கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு தனது மொத்த சந்தை கடன் இலக்கை ரூ. 7.80 லட்சம் கோடியிலிருந்து, ரூ. 12 லட்சம் கோடியாக திருத்தி உள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், “2020-21ம் நிதியாண்டில் மத்திய அரசின் திட்டமிடப்பட்ட கடன்பெறும் அளவு ரூ.12 லட்சம் கோடியாக இருக்கும். கொரோனா வைரசால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தொய்வை ஈடுகட்டும் வகையிலும், பொருளாதார மீட்சிக்காகவும் கடன் பெறும் அளவு திருத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி-மந்திரியுமான ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாங்கள் தொடரந்து விடுத்த கோரிக்கைகளை எதிர்த்தாலும், இறுதியாக மத்திய பொருளாதார விவகாரத்துறை, ரூ.7.80 லட்சம் கோடியில் இருந்து கூடுதலாக ரூ.4.20 லட்சம் கோடி கடன் பெற முடிவு செய்து, நிதிப்பற்றாக்குறையை 5.38 சதவீதமாக இலக்கு வைத்துள்ளது. இந்த முடிவை நான் வரவேற்கிறேன். இந்தத் தொகை போதாது. இன்னும் அதிகமாகக் கடன் பெறாவிட்டால் ஏழைகளுக்கு நிவாரணத் தொகை வழங்கவும், பொருளாதாரத்தை மீண்டும் இயக்கவும் இயலாது.
2020-21ம் ஆண்டு பட்ஜெட்டில் திருத்தப்பட்ட செலவினத்தை எதிர்பார்க்கிறோம். நாங்கள் கூறிய கருத்தைத்தான் உலகின் சிறந்த பொருளாதார வல்லுநர்களும், நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு அதிகமாகக் கடன் பெறலாம் என்று பரிந்துரைத்தார்கள். எங்கள் கண்ணோட்டத்தின்படி, பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை 3.5 சதவீதம் என்பது இதுபோன்ற அசாதாரண சூழலில் நாம் பின்பற்றக்கூடாது” என்று அதில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story