தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பும் பிரச்சினை: அமித்ஷா குற்றச்சாட்டுக்கு திரிணாமுல் காங்கிரஸ் மறுப்பு
தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பும் பிரச்சினை தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷா கூறிய குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்து உள்ளது.
புதுடெல்லி,
பல்வேறு மாநிலங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரெயில்கள் மூலம், அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
இந்த பிரச்சினை தொடர்பாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
பல்வேறு மாநிலங்களிலும் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரெயில்கள் மூலம் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கான வசதியை மத்திய அரசு செய்து உள்ளது. அந்த வகையில் இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு போய்ச் சேர்ந்து இருக்கிறார்கள்.
இதேபோல் பிற மாநிலங்களில் உள்ள மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். அவர்களை ரெயிலில் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து உள்ளது.
ஆனால் இதற்கு மேற்கு வங்காள அரசிடம் இருந்து எங்களுக்கு ஆதரவு இல்லை, வெளிமாநிலங்களில் இருந்து ரெயில் வருவதற்கு மேற்கு வங்காள அரசு அனுமதி அளிக்கவில்லை. இது அந்த மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு செய்யும் அநீதி ஆகும். இது அவர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு கடிதத்தில் அமித்ஷா கூறி உள்ளார்.
ஆனால் அமித்ஷாவின் இந்த குற்றச்சாட்டை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மறுத்து உள்ளது.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பல நாட்கள் அமைதியாக இருந்ததாகவும், அவர் தனது கடமையை செய்ய தவறிவிட்டார் என்றும், இப்போது மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாகவும் மம்தா பானர்ஜியின் உறவினரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அபிஷேக் பானர்ஜி, தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறி உள்ளார். அமித்ஷா தனது குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அதில் அவர் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
Related Tags :
Next Story