ஜூன் 30-ந் தேதி வரை பயணம் செய்ய முன்பதிவு செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டுகள் ரத்து - முழு தொகையும் திரும்ப வழங்கப்படும்
ஜூன் 30-ந் தேதி வரை பயணம் செய்ய முன் பதிவு செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுவதாகவும், டிக்கெட் கட்டணம் முழுவதும் திருப்பி வழங்கப்படும் என்றும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் முன்பதிவு நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் முன்பதிவு தொடங்கியது. ஆனால் ஏப்ரல் 14-ந் தேதி முதல் வழக்கமான அனைத்து ரெயில்களுக்கும் முன்பதிவு செய்வது நிறுத்தப்பட்டது.
தேவைக்கு ஏற்ப சரக்கு ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக கடந்த 1-ந் தேதி முதல் ஷராமிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் பயணிகளின் வசதிக்காக கடந்த 12-ந் தேதி முதல் டெல்லியில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.
இதற்கிடையே, வழக்கமான ரெயில்களில் வருகிற ஜூன் 30-ந் தேதி வரை பயணம் செய்வதற்காக ஊரடங்குக்கு முன்பும், ஊரடங்கு காலத்திலும் முன்பதிவு செய்தவர்களின் டிக்கெட்டுகள் அனைத்தும் ரத்தும் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வழக்கமான மெயில், எக்ஸ்பிரஸ், பயணிகள் மற்றும் புற நகர் ரெயில்களில் ஜூன் 30-ந் தேதி வரை பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.
டிக்கெட் கட்டணம் முழுவதும் பயணிகளுக்கு திருப்பி வழங்கப்படும். ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுத்தவர் களுக்கு டிக்கெட் கட்டணம் வங்கி கணக்குக்கு தானாக திருப்பி அனுப்பப்படும். மார்ச் 21-ந் தேதிக்கு முன்பு கவுண்ட்டர்களில் எடுக்கப்பட்ட டிக்கெட்டுகளை பயண தேதியில் இருந்து 6 மாதங் களுக்குள் கவுண்ட்டர்களில் கொடுத்து ரத்து செய்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
12-ந் தேதி முதல் இயக்கப்படும் சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடர்ந்து நீடிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வோர் இனி தாங்கள் போய்ச் சேரும் இடத்தின் முகவரியை தெரிவிக்க வேண்டும் என்றும், இந்த நடைமுறை 13-ந் தேதி முதல் (நேற்று முன்தினம்) முதல் அமலுக்கு வந்து இருப்பதாகவும் ரெயில்வே செய்தித் தொடர்பாளர் ஆர்.டி.பாஜ்பாய் நேற்று தெரிவித்தார். பயணிகளுக்கு கொரோனா தொற்று இருந்தால் பின்னர் அவர்களை கண்டுபிடிக்க உதவும் வகையில் டிக்கெட் முன்பதிவில் இந்த புதிய அம்சம் சேர்க்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.
ரெயில்களில் முன்பு பயணம் செய்த 12 பயணிகளுக்கு, கொரோனா தொற்று இருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த புதிய நடைமுறையை ரெயில்வே நிர்வாகம் கொண்டு வந்து உள்ளது.
Related Tags :
Next Story