பசி - தாகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல்


பசி - தாகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல்
x
தினத்தந்தி 15 May 2020 9:07 AM IST (Updated: 15 May 2020 9:07 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேச எல்லையில் பசி - தாகத்தில் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

போபால்: 

மத்திய பிரதேசத்தைப் பொறுத்தவரை, வேறு மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களை அவர்களின் இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான சவால் மற்ற இடங்களை விட அதிகமாக உள்ளது. மற்ற மாநிலங்களிலிருந்து வீடு திரும்பும் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களை மட்டுமல்லாமல், உத்தரபிரதேசம் மற்றும் பீகார் செல்லும் மக்களையும்  அவர்கள் மாநிலங்களின் எல்லைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

பார்வானி மாவட்டத்தில் அமைந்துள்ள செந்த்வா, மராட்டியத்தில் இருந்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பீகார் மற்றும் உத்தரபிரதேசத்திற்கு செல்லும் புலம்பெயர்ந்தவர்கள் கூடும் முக்கிய பகுதியாகும். 

ஒவ்வொரு நாளும், ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் ஊருக்குள்ளும் சுற்றுகிறார்கள், அங்கிருந்து அவர்கள் பேருந்துகளிலும், லாரிகளிலும் ஏறி செல்கிறார்கள்.

அதிகபட்சமாக பதற்றம் செந்த்வாவின் எல்லையில் உள்ள பிஜாசன் பகுதியில் உள்ளது.  இங்கு ஒவ்வொரு நாளும் 5,000 முதல் 6,000 தொழிலாளர்கள் வருகிறார்கள்.

கடந்த மூன்று நாட்களில், கிட்டத்தட்ட 15,000 தொழிலாளர்களுக்கு செந்த்வாவில் உணவு வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசம்-மராட்டிய எல்லையில் அமைந்துள்ள செந்த்வா நகரில் நேற்று  வன்முறை வெடித்தது. 

தாங்கள் ஊருக்குள் சென்று  பயணத்தைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோரி, தொழிலாளர்கள் ஆக்ரா-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலையிலிருந்து விலகிச் செல்லும்படி கேட்ட போலீசார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

மத்திய பிரதேச அரசு எந்த ஏற்பாடும் செய்யவில்லை என்று புலம்பெயர்ந்தோர் குற்றம் சாட்டினர். அவர்களுக்கு உணவு மற்றும் போக்குவரத்து ஏற்பாடு செய்யவில்லை என கூறினர்.

"இங்குள்ளவர்கள் ஒரு மாத குழந்தைகளுடன் பயணம் செய்கிறார்கள். மராட்டிய அரசு எங்களை இங்கு அனுப்பியது, ஆனால் மத்திய பிரதேச அரசு எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. நேற்றிரவு முதல் நாங்கள் இங்கு இருக்கிறோம் பசியிலும் தாகத்திலும் உள்ளோம் என சைலேஷ் திரிபாதி என்ற தொழிலாளி கூறினார்.

மாவட்ட கலெக்டர் அமித் தோமர் கூறும் போது பேருந்துகள் புறப்பட்டபின் சில புலம்பெயர்ந்தோர்  பின்னால் வருபவர்களுக்கு இனி வாகனங்கள் இருக்காது என்ற அச்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் நாங்கள் அவர்களுக்கு உறுதியளித்து அமைதிப்படுத்தி உள்ளோம்.

எல்லையிலிருந்து 135 பேருந்துகளில் புலம்பெயர்ந்தோர் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள அவர்களது இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

நிர்வாகம் உணவு, தண்ணீர், சொந்த வாகனங்களில் வரும் தொழிலாளர்களுக்கு தங்குமிடம் செய்து கொடுக்கிறது. கால்டையாக மத்திய பிரதேசத்திற்குள் நுழையும் மற்றவர்களுக்கு பேருந்துகள் வசதியை வழங்குகிறது என்று கூறினார்.

முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், தொழிலாளர்கள் பொறுமை காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் உணவுக்குப் பிறகு பேருந்துகள் மூலம் இலவசமாக கொண்டு செல்லப்படுவார்கள்.மத்திய பிரதேச அரசு, ஒவ்வொரு தொழிலாளியும் வீட்டிற்கு கொண்டு செல்வதை உறுதி செய்யும் என கூறினார்.

Next Story