கொரோனா பாதிப்பு : சமூக பாதுகாப்பு நிதியாக இந்தியாவுக்கு உலக வங்கி மேலும் நிதி ஒதுக்கீடு
கொரோனா தொற்றுநோய்களுக்கு மத்தியில் சமூக பாதுகாப்பு நிதியாக இந்தியாவுக்கு மேலும் உலக வங்கி நிதி ஒதுக்கி ஒப்புதல் அளித்து உள்ளது.
புதுடெல்லி
உலக நாடுகளை தனது கோரப்பிடியில் நிலைகுலைய வைத்துள்ள கொரோனா வைரஸ், இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3967 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 81,970-ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,920-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரானா தொற்றால் 2649 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு அவசரகால நடவடிக்கை மற்றும் சுகாதார அமைப்புகளுக்காக உலக வங்கி இந்தியாவுக்கு கடந்த ஏப்ரல் 3 ந்தேதி 1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய்) ஒதுக்கி ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் மேலும் 1 பில்லியன் டாலர் இந்தியாவுக்கான சமூக பாதுகாப்பு தொகுப்பை உலக வங்கி இன்று அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் வழக்குகளை அடுத்து இந்த தொகுப்பு அறிவிக்கப்பட்டது.
இந்த தொகுப்பு இரண்டு கட்டங்களாக நிதியளிக்கப்படும் - 2020 நிதியாண்டிற்கு உடனடியாக 750 மில்லியன் டாலர் ஒதுக்கீடு மற்றும் 2021 ஆம் நிதியாண்டில் 250 மில்லியன் டாலர் இரண்டாவது தவணையாக கிடைக்கும்.
இந்த நடவடிக்கையின் முதல் கட்டம் பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா (பி.எம்.ஜி.கே.ஒய்) மூலம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்.
இரண்டாவது கட்டத்தில், இந்த திட்டம் சமூக பாதுகாப்பு தொகுப்பை ஆழப்படுத்தும், இதன் மூலம் உள்ளூர் தேவைகளின் அடிப்படையில் கூடுதல் பணம் மற்றும் நன்மைகள் மாநில அரசுகள் மற்றும் சிறிய சமூக பாதுகாப்பு விநியோக முறைகள் மூலம் விரிவாக்கப்படும்.
சமூகப் பாதுகாப்பிற்கான உலக வங்கியின் பில்லியன் டாலர் ஆதரவு இந்தியாவில் பிரதமர் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்திற்கு பயன்படுத்த உதவும் என்று உலக வங்கி இயக்குநர் (இந்தியா) ஜுனைத் கமல் அகமது கூறினார்.
உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தை சமாளிக்க நாடுகளுக்கு உதவும் வகையில் 15 மாதங்களுக்கு மேலாக 160 பில்லியன் டாலர் அவசர உதவிகளை வழங்குவதற்கான திட்டத்திற்கு ஏப்ரல் மாதத்தில் உலக வங்கி ஒப்புதல் அளித்தது.
Related Tags :
Next Story