ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் செல்போன்கள் மூலம் கொரோனா பரவும் ஆபத்து - ‘எய்ம்ஸ்’ டாக்டர்கள் எச்சரிக்கை
செல்போன்கள் மூலம் கொரோனா பரவும் ஆபத்து இருக்கிறது. அதனால், அதை ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று ‘எய்ம்ஸ்’ டாக்டர்கள் கூறியுள்ளனர்.
புதுடெல்லி,
அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவன (எய்ம்ஸ்) ஆஸ்பத்திரி கிளை, சத்தீஸ்கார் மாநில தலைநகர் ராய்ப்பூரில் உள்ளது. அங்கு பணியாற்றும் குடும்ப மருத்துவத்துறை டாக்டர்கள் 5 பேர், ஒரு சர்வதேச மருத்துவ பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
செல்போன் மேற்பரப்பு, கொரோனா பரவலுக்கு அதிக வாய்ப்பு கொண்டது. செல்போன் பேசும்போது, நமது முகம், காது, கண், வாய் ஆகியவற்றை ஒட்டியே வைத்திருப்போம். எனவே, எளிதாக வைரஸ் பரவும். என்னதான் கைகளை முறையாக கழுவினாலும், செல்போன், கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும்.
ஒரு ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்ட ஆய்வில், 15 நிமிடத்தில் இருந்து 2 மணி நேரத்துக்கு ஒருதடவை சுகாதார பணியாளர்கள் செல்போன் பயன்படுத்துவது தெரிய வந்தது. ஏறத்தாழ 100 சதவீதம் பேரும் செல்போன் பயன்படுத்தினாலும், 10 சதவீதம்பேர் மட்டுமே அவ்வப்போது செல்போனை துடைக்கின்றனர்.
சுகாதார பணியாளர்களுக்கு முக கவசம், தொப்பி ஆகியவை போல், செல்போனும் உடலுடன் ஒட்டியே இருக்கிறது. ஆனால், முக கவசம், தொப்பி ஆகியவற்றை துவைப்பதுபோல், செல்போன்களை துவைக்க முடியாது. கையின் நீட்சியாக செல்போன் இருப்பதால், செல்போனில் இருக்கும் எல்லாமே கைக்கு மாறும்.
மேலும், செல்போன்கள், பாக்டீரியாக்கள் குடியிருக்க வாய்ப்புள்ளவை. கை சுத்தத்தாலும் அதை தடுக்க முடியாது. எனவே, ஆஸ்பத்திரிகளில், தகவல் பரிமாற்றத்துக்கு செல்போன்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, ஹெட்போன்கள், இன்டர்காம் தொலைபேசி ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
மேலும், செல்போன்களை பல இடங்களுக்கு எடுத்துச் செல்வதன்மூலம், கிருமி பரவும் என்பதால், வெளியிடங்களிலும் அதை பயன்படுத்துவதை கைவிட வேண்டும். செல்போன்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இதுதொடர்பாக, அரசு அமைப்புகளும், உலக சுகாதார நிறுவனமும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story