விவசாய துறைக்கு ரூ.1½ லட்சம் கோடி திட்டங்கள் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளின் மேம்பாட்டுக்கு ரூ.1 லட்சத்து 63 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார்.
புதுடெல்லி,
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் மீட்டெடுக்கும் வகையில், ரூ.20 லட்சம் கோடி மதிப்பலான சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
அதன்படி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் கட்டுமான துறைக்கான சலுகை திட்டங்களை புதன்கிழமையும், வெளிமாநில தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்டோருக்கான சலுகை திட்டங்களை நேற்று முன்தினமும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
3-வது கட்டமாக நேற்று விவசாயம், பால், மீன்வளத்துறை தொடர்பான சலுகை திட்டங்களை அவர் அறிவித்தார். அப்போது இந்தியாவில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை சார்ந்து இருப்பதாகவும், பால் உற்பத்தி மற்றும் மீன்பிடி தொழிலில் இந்தியா முன்னோடியாக விளங்குவதாகவும் கூறிய அவர் விவசாயம் சார்ந்த தொழில்கள் தொடர்பாக 8 அறிவிப்புகளையும், நிர்வாக கட்டமைப்பு தொடர்பான 3 அறிவிப்புகளையும் வெளியிட்டார். ரூ.1 லட்சத்து 63 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அவர் வெளியிட்ட அறிவிப்புகள் விவரம் வருமாறு:-
* ஊரடங்கு காலத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையில் ரூ.74,300 கோடிக்கு விவசாய விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.
* பிரதமர் விவசாய நிதியில் இருந்து ரூ.18,700 கோடி வினியோகம் செய்யப்பட்டது.
* பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.6,400 கோடி விவசாயிகளால் பெறப்பட்டு உள்ளது.
* ஊரடங்கு காலத்தில் நாட்டில் பாலின் தேவை 20 முதல் 25 சதவீதம் வரை குறைந்தது.
* கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஒரு நாளைக்கு 5 கோடியே 60 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, 3 கோடியே 60 லட்சம் லிட்டர் விற்பனை செய்யப்பட்டது.
* கூடுதலாக 111 கோடி லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு அதற்காக ரூ.4,100 கோடி வழங்கப்பட்டது.
* கடனை முறையாக திருப்பி செலுத்திய பால் கூட்டுறவு சங்கங்களுக்கு 2 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்பட்டது.
* இந்த திட்டம் 2 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.5,000 கோடி கூடுதல் பணப்புழக்கத்துக்கு வழிவகுக்கும்.
* மார்ச் மாதத்துடன் அங்கீகாரம் இழந்த 242 இறால் பண்ணைகள் மேலும் 3 மாதங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
* வேளாண் அடிப்படையிலான கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி விடுவிக்கப்படும்.
* நுண் உணவு உற்பத்தி நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.
* கடல் மற்றும் உள்நாட்டு மீன்பிடி தொழில், மீன்வளர்ப்பு தொழிலை மேம்படுத்த ரூ.11 ஆயிரம் கோடியில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படும்.
* மீன்பிடி துறைமுகங்கள், சந்தைகள் போன்றவற்றுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.9 ஆயிரம் கோடி செலவிடப்படும்.
* இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் மீன் உற்பத்தி 70 லட்சம் டன் அதிகரிக்கும். 55 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெறுவதோடு, ஏற்றுமதி ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.
* கால்நடைகளை நோய்களில் இருந்து பாதுகாக்க ரூ.13,343 கோடியில் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதுவரை 1½ கோடி பசுக்கள், எருமைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது.
* கால்நடை வளர்ப்பு தொடர்பான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.15 ஆயிரம் கோடியில் நிதி ஏற்படுத்தப்படும்.
* தேசிய மூலிகை செடிகள் வாரியத்தின் ஆதரவுடன் 2.25 லட்சம் ஹெக்டேரில் மூலிகை செடிகள் வளர்க்கப்படுகின்றன.
* அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.4 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீட்டில் 10 லட்சம் ஹெக்டேரில் மூலிகை செடிகள் பயிரிடப்படும். இதன்மூலம் விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும்.
* மூலிகை பொருட்களுக் காக பிராந்திய அளவில் மார்க்கெட்டுகள் ஏற்படுத்தப்படும்.
* கிராமப்புறங்களில் தேனீ வளர்ப்புக்கு ஆதரவு அளிக்கப்படும். இதற்காக ரூ.500 கோடியில் திட்டம் நிறைவேற்றப்படும்.
* ஆபரேஷன் பசுமை திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்படுகிறது.
* பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு காய்கறிகளை விற்க கொண்டு செல்வோருக்கு போக்குவரத்து செலவில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
* அனைத்து வகையான காய் கறிகள் மற்றும் பழங்களை குளிர்பதன கிடங்கில் வைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படும்.
* விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்யும் வகையில் அத்தியவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்.
* விவசாய விளை பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய வழிவகை செய்யப்படும். மேற்கண்ட அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
Related Tags :
Next Story