மதுக்கடைகளை மூடுமாறு பிறப்பித்த ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை


மதுக்கடைகளை மூடுமாறு பிறப்பித்த ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை
x
தினத்தந்தி 16 May 2020 5:30 AM IST (Updated: 16 May 2020 5:01 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

புதுடெல்லி, 

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, நிபந்தனைகளுடன் மதுக்கடைகளை திறக்க கடந்த 6-ந் தேதி அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 7-ந் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

இந்தநிலையில், நிபந்தனைகள் எதையும் அரசு பின்பற்றவில்லை என்றும், இதனால் மதுவிற்பனையின் காரணமாக கொரோனா தீவிரமாக பரவும் ஆபத்து இருப்பதாகவும், எனவே மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சென்னை ஐகோர்ட்டில் மக்கள் நீதி மய்யம் சார்பிலும், வக்கீல் ராஜேஷ் ஆகியோர் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை 8-ந் தேதி விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டனர். ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அரசு விரும்பினால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோருக்கு, வீடுகளுக்கே நேரடியாக சென்று விற்பனை செய்யும் (‘டோர் டெலிவரி’) முறையை மேற்கொள்ளலாம் என்று கூறினார்கள்.

இதனால் 2 நாள் விற்பனைக்கு பிறகு மதுக்கடைகளை தமிழக அரசு இழுத்து மூடியது. இதே போன்ற மனு ஒன்றின் மீது மதுரை ஐகோர்ட்டும் கடந்த 11-ந் தேதி மதுக்கடைகளை மூடுவது தொடர்பாக உத்தரவு பிறப்பித்தது.

இந்தநிலையில், மதுக்கடைகளை மூட ஐகோர்ட்டு உத்தரவிட்டதை எதிர்த்து தமிழ்நாடு மாநில வாணிப கழகம் (டாஸ்மாக்) சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக விசாரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், எஸ்.கே.கவுல், பி.ஆர்.கவாய் ஆகியோர் நேற்று காணொலி மூலம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். அப்போது தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜர் ஆனார்கள்.

அவர்கள் வாதாடுகையில் கூறியதாவது:-

கடந்த 6-ந் தேதி சென்னை ஐகோர்ட்டின் முதன்மை அமர்வு பிறப்பித்த உத்தரவில் மது வாங்குவோர் ஒவ்வொருவருக்கும் இரண்டு லிட்டர் அளவு கொண்ட பாட்டில்களுக்கு மேல் வழங்கக் கூடாது என்றும், ஆதார் கார்டு தகவல்களை கொடுத்த பின்னரே அவர்களுக்கு மது விற்கலாம் என்றும் கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து, 44 நாட்களுக்கு பிறகு 7-ந் தேதி மது விற்பனையை தொடங்கிய போது கடைகளில் மக்களின் கூட்டம் நெருக்கியடித்தது. இதனை காரணமாக, தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூடுமாறும், ஆன்லைனில் மது விற்பனையை மேற்கொள்ளலாம் என்றும் ஐகோர்ட்டு மீண்டும் உத்தரவு பிறப்பிக்க நேர்ந்தது. ஆன்லைன் மூலம் மது விற்பனையை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறு எதுவும் இல்லை. அப்படி செய்தால் மது கடத்தல், கள்ளச்சாராயம், சட்டம்-ஒழுங்கு ஆகிய பிரச்சினைகள் ஏற்படும். மேலும் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஆன்லைன் மூலம் மது விற்கும் நடைமுறை அமலில் இல்லை.

டாஸ்மாக் மதுபான கடைகளில் அனைத்து நிபந்தனைகளும் முறையாக பின்பற்றப்பட்டன. சமூக விலகல் கடைபிடிக்கப்பட்டது. ஊரடங்கு நேரத்தில் மதுக்கடைகளை மூடி வைக்க கோரும் மனு ஒன்றை கடந்த 8-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மாநில அரசுகளின் முடிவில் தலையிட விரும்பவில்லை என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவு ஏற்கத்தக்கது அல்ல. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக கடந்த 6 மற்றும் 8-ந் தேதிகளில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கும், கடந்த 11-ந் தேதி மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

அத்துடன், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த மனுதாரர்கள், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவின் மீது பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பவும் அவர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.

Next Story