சவாலான சூழலில் ரேசன் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்த்த மாநில அரசுகளுக்கு பாராட்டுகள்; மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்


சவாலான சூழலில் ரேசன் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்த்த மாநில அரசுகளுக்கு பாராட்டுகள்; மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 17 May 2020 11:38 AM IST (Updated: 17 May 2020 11:38 AM IST)
t-max-icont-min-icon

சவாலான சூழலில் ரேசன் பொருட்களை இந்திய உணவு கழகத்துடன் இணைந்து மாநில அரசுகள் மக்களிடம் கொண்டு சேர்த்ததற்கு தனது பாராட்டுகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்து கொண்டார்.

புதுடெல்லி,

ரேசன் பொருட்களை இந்திய உணவு கழகத்துடன் இணைந்து மாநில அரசுகள் மக்களிடம் கொண்டு சேர்த்ததற்கு தனது பாராட்டுகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்து கொண்டார்.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து ரூ.20 லட்சம் கோடி திட்டத்திற்கான இறுதி கட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

பிரதமர் மோடி கடந்த 12ந்தேதி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.  அப்போது, கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், இதுபற்றிய விரிவான தகவல்களை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை (கடந்த 13ந்தேதி) முதல் வெளியிடுவார் என்றும் அறிவித்தார்.

அதன்படி அந்த திட்டம் பற்றிய தகவல்களை நிர்மலா சீதாராமன் கடந்த புதன்கிழமை வெளியிட்டார்.  இதில் அவர் பேசும்பொழுது, பிரதமர் மோடி பல்வேறு தரப்பினருடன் கலந்து ஆலோசித்து, பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதி தொகுப்பு திட்டத்தை அறிவித்து உள்ளார். ‘சுயசார்பு இந்தியா’ என்ற தலைப்பிலான இந்த தொலைநோக்கு திட்டம் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, மக்கள் தொகை, அமைப்பு முறை, தேவை ஆகிய 5 தூண்களை அடிப்படையாக கொண்டது.

உள்நாட்டில் சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்கள்தான் பின்னர் வளர்ச்சி அடைந்து பெரு நிறுவனங்களாக மாறி உள்ளன. உள்ளூர் நிறுவனங்களை உலக நிறுவனங்கள் ஆக்குவதே மத்திய அரசின் நோக்கம் ஆகும்.  பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், தொழில் துறைக்கு ஊக்கம் அளிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என கூறினார்.

தொடர்ந்து அவர், தொழில் துறைக்கு ஊக்கம், சுகாதார பணியாளர்களுக்கு காப்பீடு, சிறு, குறு நிறுவனங்களுக்கான சலுகைகள் ஆகியவற்றுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதேபோன்று தொழிலாளர் வருங்கால வைப்புநிதி, ஒப்பந்தப்புள்ளி, ஒப்பந்ததாரர்களுக்கு சலுகைகள் மற்றும் கட்டுமான பணிகள் ஆகியவற்றுக்கான சலுகைகள் பற்றிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.  இந்த அறிவிப்புகளை தொடர்ந்து, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 14ந்தேதி மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  இந்த 2ம் கட்ட சந்திப்பில் அவர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதில், வெளிமாநில தொழிலாளர்கள், சிறு விவசாயிகள், சிறு வியாபாரிகள், சாலையோர வியாபாரிகளுக்கான சலுகை திட்டங்களை அவர் அறிவித்தார். இனி வரும் நாட்களில் விவசாயிகள் உள்ளிட்டோருக்கு மேலும் பல திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் அப்போது அவர் கூறினார்.  இதனை தொடர்ந்து, அவர் 15ந்தேதி மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவர் 3-வது கட்டமாக, விவசாயம், பால், மீன்வளத்துறை தொடர்பான சலுகை திட்டங்களை அறிவித்தார். அப்போது இந்தியாவில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை சார்ந்து இருப்பதாகவும், பால் உற்பத்தி மற்றும் மீன்பிடி தொழிலில் இந்தியா முன்னோடியாக விளங்குவதாகவும் கூறிய அவர் விவசாயம் சார்ந்த தொழில்கள் தொடர்பாக 8 அறிவிப்புகளையும், நிர்வாக கட்டமைப்பு தொடர்பான 3 அறிவிப்புகளையும் வெளியிட்டார். ரூ.1 லட்சத்து 63 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இந்த நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களுடன் நடத்திய 4வது கட்ட சந்திப்பில் ரூ.20 லட்சம் கோடி திட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவற்றில், உற்பத்தி துறையில் முதலீடு, நிலக்கரி சுரங்கங்கள் ஏலம், விமான நிறுவனங்களுக்கான தளர்வுகள், மின் வினியோகம் தனியார் மயம், குறைந்த செலவில் சிகிச்சை உள்ளிட்டவை பற்றி அறிவிப்புகள் வெளியாகின.

இந்நிலையில், சுயசார்பு இந்தியா திட்டத்தின் இறுதி கட்ட அறிவிப்புகளை அவர் இன்று வெளியிட்டார்.  அவர் பேசும்பொழுது, 3 மாதங்களுக்கு தேவையான அதிக அளவிலான தானியங்கள் முன்பே வழங்கப்பட்டு விட்டன.  ரேசன் பொருட்களை இந்திய உணவு கழகத்துடன் இணைந்து மாநில அரசுகள் சவால்கள் நிறைந்த சூழலில் மக்களிடம் கொண்டு சேர்த்து உள்ளன.  அதற்கு எனது பாராட்டுகள் என அவர் தெரிவித்து கொண்டார்.

இந்த திட்டத்தில் 100 நாள் வேலை திட்டம், கல்வி, மருத்துவம், நிலம், தொழிலாளர் நலன், பணப்புழக்கம் பற்றிய அறிவிப்புகள் மற்றும் பொது துறை நிறுவனங்கள் போன்ற 7 திட்டங்களுக்கான புதிய அறிவிப்புகள் இன்று வெளியாகின்றன.

Next Story