நாட்டில் மாநில அரசுகளின் கடன் வாங்கும் வரம்பு 3%ல் இருந்து 5% ஆக அதிகரிக்கப்படும்
நாட்டில் மாநில அரசுகளின் கடன் வாங்கும் வரம்பு 3%ல் இருந்து 5% ஆக அதிகரிக்கப்படும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டத்திற்கான இறுதி கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி மந்திரி இன்று வெளியிட்டார். அவர் கூறும்பொழுது, எளிய முறையில் பன்னாட்டு நிறுவனங்கள் வர்த்தகம் மேற்கொள்வதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றிய அடுத்த கட்ட பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.
மாநில அரசுகளின் கடன் வாங்கும் வரம்பு 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரிக்கப்படும். இந்த கடன் வரம்பு உயர்வில் 3.5 சதவீதம் வரை எந்த நிபந்தனையும் கிடையாது. மீதமுள்ள 1.5 சதவீதம் சில குறிப்பிட்ட திட்டங்கள், சீர்திருத்தங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். இன்னும் 86 சதவீத வரம்புகளை மாநில அரசுகள் பயன்படுத்தாமல் உள்ளது. இதுவரை அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட கடன் வரம்பில் 14 சதவீதம் அளவுக்கே பயன்படுத்தி உள்ளன என அவர் கூறினார்.
தொழிலாளர்கள் நலன் என்ற வகையில், சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பிற்காக தொற்று நோய்கள் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதனால், பணியாளர் ஒருவருக்கு ரூ.50 லட்சம் காப்பீடு அறிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலங்களுக்கு ரூ.4 ஆயிரத்து 113 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.
சுகாதார செலவுகளுக்கான நிதி அதிகரிக்கப்படும். குறிப்பிட்ட மாவட்டங்களில் சுகாதாரம் மற்றும் நல மையங்களுக்காக அடிமட்டம் வரையில் முதலீடுகள் அதிகரிக்கப்படும். அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் தொற்று நோய்களுக்கான வார்டுகள் அமைக்கப்படும். பிளாக் மட்டத்தில் பொது சுகாதார பரிசோதனை கூடங்கள் அமைக்கப்படும்.
இந்த மாத இறுதியில் (மே 30, 2020) ஆன்லைன் வகுப்புகளை தொடங்க நாட்டின் முதல் 100 பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
நாட்டில் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக மாநில அரசுகளின் வருவாய் பெருமளவு குறைந்துள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில், மாநில அரசுகளுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. வருவாய் பற்றாக்குறை மானியத்தை குறித்த காலத்தில் மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது.
இதன்படி, அரசின் கடுமையான நிதி சுமையான சூழலிலும், கடந்த ஏப்ரல் மற்றும் நடப்பு மே மாதங்களுக்கான வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.12,390 கோடி நிதியானது, மாநில அரசுகளுக்கு சரியான காலகட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
Related Tags :
Next Story