நாடு முழுவதும் 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: பஸ் போக்குவரத்து பற்றி மாநிலங்களே முடிவு செய்யலாம் - மத்திய அரசு அனுமதி
நாடு முழுவதும் ஊரடங்கை 31-ந் தேதிவரை நீட்டித்து உள்ள மத்திய அரசு, பஸ் போக்குவரத்து பற்றி மாநிலங்களே முடிவு செய்யலாம் என்று கூறி இருப்பதோடு, திருமண விழாக்களில் 50 பேர் கலந்து கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. முதலில் மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை முதல் ஊரடங்கு போடப்பட்டது. பின்னர் அந்த ஊரடங்கு மே மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு மே 17-ந் தேதி வரை (நேற்று) நீட்டிக்கப்பட்டது. இந்த மூன்றாவது ஊரடங்கு நேற்று முடிந்ததைத் தொடர்ந்து நான்காவது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு 31-ந் தேதி வரையில் அமலில் இருக்கும்.
இதையொட்டி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்று வெளியிட்ட உத்தரவில், “கொரோனா வைரஸ் தொற்றை (கோவிட்-19) கட்டுப்படுத்த நாட்டில் மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட வேண்டும்” என கூறப்பட்டு உள்ளது.
இதையொட்டி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் ஜி.வி.வி.சர்மா கூறுகையில், “பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் பிரிவு 6 (2) (1) வழங்கியுள்ள அதிகாரத்தின் கீழ், இந்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள், மாநில அரசு அதிகாரிகள் ஊரடங்கை மே 31-ந் தேதி வரை தொடர்வதற்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்துகிறது” என குறிப்பிட்டு உள்ளார்.
இந்த நான்காவது ஊரடங்கு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. முக்கியமாக திருமண விழாக்களில் 20 பேர் கலந்து கொள்ளத்தான் இதுவரை அனுமதி இருந்தது. இனி 50 பேர் வரை கலந்துகொள்ளலாம் என்கிற வகையில் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் சமூக இடைவெளியை கண்டிப்புடன் பின்பற்றப்பட வேண்டும்.
மாநிலங்கள் இடையேயான பஸ் போக்குவரத்து பற்றி சம்மந்தப்பட்ட மாநிலங்கள் முடிவு எடுத்து இயக்க அனுமதி தரப்பட்டு உள்ளது.
விளையாட்டு வளாகங்கள், மைதானங்களை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இடம்பெற்றுள்ள பிற முக்கிய தடைகள் வருமாறு:-
* உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைக்கு தடை நீடிக்கிறது. அதே நேரத்தில் ஆம்புலன்ஸ் விமான சேவை, உள்துறை அமைச்சக நோக்கங் களுக்கான, பாதுகாப்பு காரணங்களுக்கான விமான சேவை அனுமதிக்கப்படுகிறது.
* மெட்ரோ ரெயில் சேவைக்கு தடை நீடிக்கிறது.
* பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கும். ஆன்லைன் மற்றும் தொலைதூர கல்வி முறை தொடர அனுமதி உண்டு.
* ஓட்டல்கள், உணவு விடுதிகளில் அமர்ந்து சாப்பிட தடை தொடருகிறது. ‘பார்சல்’ சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
* திரையரங்குகள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி மையங்கள், நீச்சல் குளங்கள், உல்லாச பூங்காக்கள், நாடக அரங்குகள், மது விடுதிகள், கூட்ட அரங்குகள் ஆகியவற்றுக்கு தடை தொடர்கிறது.
* சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார, மத நிகழ்ச்சிகளில் கூடுவதற்கு தடை தொடர்கிறது.
* அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு இருக்கும். மதக்கூட்டங்கள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.
கட்டுப்பாட்டு மண்டலங்கள் தவிர்த்து பிற இடங்களுக்கான கட்டுப்பாடுகளுடனான அனுமதி விவரம் வருமாறு:-
* மாநிலங்கள் இடையே பரஸ்பர சம்மதத்துடன் பயணிகள் வாகனம், பஸ் போக்குவரத்தை நடத்த அனுமதிக்கப்படுகிறது.
* சிவப்பு, பச்சை, ஆரஞ்சு மண்டலங்களை சம்மந்தப்பட்ட மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும், மத்திய சுகாதார அமைச்சகத்தின் வரைமுறைகளுக்கு ஏற்ப இனி மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.
* சிவப்பு, ஆரஞ்சு, கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் எல்லை நிர்ணயிப்பதை மாவட்ட நிர்வாகங்களே மேற்கொள்ளலாம்.
* கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் அத்தியாவசிய செயல்பாடுகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இதன் உள்ளேயும், வெளியேயும் மருத்துவ காரணங்கள் தவிர வேறு காரணங்களுக்காக மக்கள் சென்றுவர அனுமதி கிடையாது.
* கட்டுப்பாட்டு மண்டலத்துக்குள் தீவிரமாக தடம் அறிதல், வீடுகள் தோறும் கண்காணிப்பு நடைபெறுவதுடன் தேவையான பிற தலையீடுகள் அனுமதிக்கப்படுகிறது.
* இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரையில் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்காகவும் வெளியே செல்ல அனுமதி கிடையாது.
* 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டும். அத்தியாவசிய, மருத்துவ காரணங்களுக்காக மட்டும் வெளியே செல்லலாம்.
* பொது இடங்களில், பணியிடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
* பொது இடங்களில், வேலைபார்க்கும் இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும்.
* எல்லா இடங்களிலும், போக்குவரத்து சாதனங்களிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
* இறுதிச் சடங்குகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அதிகபட்சம் 20 பேர் கலந்து கொள்ளலாம்.
* பொது இடங்களில் மது பானங்கள் அருந்தக்கூடாது. புகையிலை பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
* கடைகளில் வாடிக்கையாளர்கள் இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கடைகளில் அனுமதி இல்லை.
*முடிந்த வரையில் வீட்டில் இருந்து பணி செய்வது தொடரப்பட வேண்டும். பொது இடங்களில் கண்டிப்பாக வெப்ப பரிசோதனை, கை கழுவுதல், கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்தல் பின்பற்றப்பட வேண்டும்.
* பணி இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story