பீகாரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி
பீகார் மாநிலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகினர்.
பாட்னா,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், வேலையிழந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பி வருகின்றனர். பொது போக்குவரத்து முடக்கப்பட்டதால், பல நூறு கி.மீட்டர்களுக்கு நடந்தே பல தொழிலாளர்கள் சென்றதைக் காண முடிந்தது. அதேபோல், டிரக்குகள் போன்ற சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டனர்.
இதையடுத்து, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காகச் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரெயில்கள் இயக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக சிறப்பு ரெயில்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். எனினும், சில இடங்களில் தொழிலாளர்கள் நடந்து செல்லும் சோகம் தொடர்கிறது.
இந்த நிலையில், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பணிபுரிந்த பீகாரின் கிழக்கு மற்றும் மேற்கு சாம்பரன் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட காரணத்தால் லாரியில் சைக்கிள்கள் உள்ளிட்டவற்றுடன் சொந்த மாநிலத்துக்கு திரும்பி வந்தனர்.
6 நாள்கள் பயணத்துக்கு பிறகு பீகாரின் பாகல்பூர் எனுமிடத்தில் லாரி வந்தபோது பேருந்து மீது மோதாமல் இருக்க தவிர்க்க முயன்றபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்களின் அடையாள அட்டைகளில் அவர்களில் சிலர் கிழக்கு மற்றும் மேற்கு சாம்பரன் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று காட்டி உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 தினங்களில், சொந்த ஊருக்கு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கி 50-க்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story