சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மேலும் ரூ.3 லட்சம் கோடி கடன் உதவி: மத்திய மந்திரிசபை ஒப்புதல்


சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மேலும் ரூ.3 லட்சம் கோடி கடன் உதவி: மத்திய மந்திரிசபை ஒப்புதல்
x
தினத்தந்தி 21 May 2020 4:00 AM IST (Updated: 21 May 2020 3:40 AM IST)
t-max-icont-min-icon

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மேலும் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து இருக்கிறது.

புதுடெல்லி, 

மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு நூறு சதவீத அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்க மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த ஆண்டிலும், அடுத்த 3 நிதி ஆண்டுகளிலும் இதற்காக ரூ.41,600 கோடியை மத்திய அரசு ஒதுக்கும்.

கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் உற்பத்தி பாதிக்கப்பட்டு இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கடியை சந்தித்துள்ள சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில் சில நிபந்தனைகளுடன் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.


தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சுமார் 8 கோடி பேருக்கு தலா ஒருவருக்கு 5 கிலோ வீதம் ஜூன் மாதம் வரை இலவசமாக உணவு தானியம் வழங்க ரூ.3,109 கோடியே 25 லட்சத்தை மானியமாக ஒதுக்கவும் மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டு வசதி நிறுவனங்களுக்கு சிறப்பு கடனுதவி வழங்கும் நிதி அமைச்சகத்தின் திட்டத்துக்கும் மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Next Story