இந்தியாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 5,611 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்வு
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 5,611 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் நாட்டில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
சீனாவில் உருவான கோவிட்-19 என பெயரிடப்பட்ட கொரோனா வைரஸ் உலகில் உள்ள 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த வைரஸ் தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில், கொரோனா அமெரிக்கா, ஸ்பெயின், பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளை போன்று அதிக பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்றாலும், தன்னால் முடிந்தவரை ஊரடங்கு மத்தியில் பலரை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினமே இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது.
இந்தியாவில் கடந்த 18-ந்தேதி 5,242 பேர் பாதிக்கப்பட்டதே ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பாக இருந்து வந்த நிலையில், நேற்றைய பாதிப்பு அதை விஞ்சியது. அதன்படி அதிகபட்சமாக ஒரே நாளில் 5,611 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் நாட்டில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,01,139-ல் இருந்து 1,06,750 ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதிதாக 140 பேர் இந்த வைரசால் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 3,303 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 3,125 பேர் கொரோனா நோய் பாதிப்பில் இருந்து குணமாகி ‘டிஸ்சார்ஜ்’ ஆகி உள்ளனர். இதனால் பூரண குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 42,298 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 61,149 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மராட்டிய மாநிலத்தில் மட்டும் கொரோனா 37,136 பேரை நோய் பாதிப்புக்கு ஆளாக்கி இருக்கிறது. தமிழகத்தில் புதிதாக 743 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12,448-ல் இருந்து 13,191 ஆக உயர்ந்துள்ளது. குஜராத்திலும் இந்த எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துவிட்டது. டெல்லியில் கொரோனா 10,500-க்கும் மேற்பட்டவர்களை பாதிக்கச் செய்துள்ளது.
ராஜஸ்தானில் 5,845 பேரையும், மத்திய பிரதேசத்தில் 5,465 பேரையும், உத்தரபிரதேசத்தில் 4,926 பேரையும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. மேற்கு வங்காளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
ஆந்திராவில் 2,532 பேரும், பஞ்சாபில் 2,002 பேரும், தெலுங்கானாவில் 1,634 பேரும், பீகாரில் 1,498 பேரும், கர்நாடகாவில் 1,397 பேரும், ஜம்மு-காஷ்மீரில் 1,317 பேரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 13 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருந்த நிலையில், புதிதாக ஒடிசாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது. அங்கு 1,052 பேரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. அரியானாவில் 964 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் 642 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளது. மற்ற மாநிலங்களில் பாதிப்பு 250-க்கு கீழே உள்ளது.
நாட்டில் 7 மாநிலங்களில் கொரோனா 100-க்கும் அதிகமானோரை உயிரிழக்கச் செய்துள்ளது. மராட்டியத்தில் மட்டும் 1,325 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர்.
குஜராத்தில் 719 பேரும், மத்திய பிரதேசத்தில் 258 பேரும், மேற்கு வங்காளத்தில் 250 பேரும், டெல்லியில் 168 பேரும், ராஜஸ்தானில் 143 பேரும், உத்தரபிரதேசத்தில் 123 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மற்ற மாநிலங்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 100-க்கு கீழே இருக்கிறது.
Related Tags :
Next Story