புயல் பாதிப்பு; மேற்கு வங்காளத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்: பிரதமர் மோடி உறுதி
புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்து உள்ளார்.
புதுடெல்லி,
தெற்கு வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, நேற்று மதியம் 2.30 மணியளவில் மேற்கு வங்காளத்தின் திகா கடற்கரை மற்றும் வங்காளதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே சுந்தரவன காடுகள் பகுதியையொட்டி கரையை கடந்தது.
இதனால் மேற்கு வங்காளத்திலும், ஒடிசாவிலும் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இரு மாநிலங்களிலும் கடலோர பகுதிகளிலும், தாழ்வான இடங்களிலும் வசிக்கும் மக்கள் சுமார் 6 லட்சத்து 58 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
அந்த வகையில் மேற்கு வங்காளத்தில் 5 லட்சம் பேரும், ஒடிசாவில் சுமார் 1 லட்சத்து 58 ஆயிரம் பேரும் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
புயல் கரையை கடந்தபோது மணிக்கு 160 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது. கரையை கடக்க தொடங்கிய புயல் கொல்கத்தாவின் கிழக்கு பகுதி வழியாக நகர்ந்து தெற்கு, வடக்கு 24 பர்கானா மாவட்டங்கள் வழியாக வடக்கு மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி சென்றது. இதனால் மேற்கு வங்காளத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. புயல் கரையை கடக்க சுமார் 5 மணி நேரம் ஆனது.
ஆம்பன் புயலால் மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாசில் 5,500 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டது. கொல்கத்தாவில், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டன. கதவுகள், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. ஆம்பன் புயல் கரையை கடந்த போது சுழன்றடித்த காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் மேற்கு வங்காளத்திலும், ஒடிசாவின் கடலோர மாவட்டங்களிலும் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. சில இடங்களில் வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன.
இதுவரை 12 பேர் பலியாகி உள்ளனர். மேற்கு வங்காளத்தின் உட்கட்டமைப்பு பாதிப்படைந்து உள்ளது. இதுபற்றி பிரதமர் மோடி டுவிட்டரில் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், இந்த சவாலான நேரத்தில், மேற்கு வங்காளத்துடன் ஒட்டுமொத்த நாடும் துணை நிற்கிறது.
மேற்கு வங்காள மக்களின் நலனுக்காக நான் வேண்டி கொள்கிறேன். இயல்பு நிலை திரும்புவதனை உறுதி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். புயல் பாதித்த மக்களுக்கு உதவுவதில் சாத்தியப்பட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story