ஜூன் 1-ந் தேதி முதல் ரெயில் போக்குவரத்து: 2 மணி நேரத்தில் 1½ லட்சம் டிக்கெட் முன்பதிவு
ஜூன் 1-ந் தேதி முதல் தொடங்கும் ரெயில் போக்குவரத்துக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. 2 மணி நேரத்தில் 1½ லட்சம் டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அதே சமயம் தமிழகத்துக்கு ரெயில்கள் இயக்கப்படாததால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
புதுடெல்லி,
ஊரடங்கு தொடங்கியவுடன் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல கடந்த 1-ந் தேதி முதல், சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 12-ந் தேதி முதல், டெல்லிக்கும், 15 நகரங்களுக்கும் இடையே சிறப்பு ரெயில் போக்குவரத்து தொடங்கியது.
இந்நிலையில், ஜூன் 1-ந் தேதி முதல், தினமும் 200 ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் அறிவித்தார். அந்த ரெயில்களின் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
17 ஜனசதாப்தி ரெயில்கள், 5 துரந்தோ ரெயில்கள், சம்பர்க் கிராந்தி ரெயில்கள், பூர்வா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆகியவையும் அவற்றில் அடங்கும். இவற்றில் ஏ.சி. பெட்டிகள், ஏ.சி. அல்லாத பெட்டிகள் உள்ளன. இவை, வழக்கமான ரெயில்கள் நேரத்தில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் ஆகும்.
ஆனால், தமிழ்நாட்டுக்கு எந்த ரெயிலும் இல்லை. தமிழகத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். மேலும் தமிழகத்துக்குள்ளயே பலர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் சாப்பாட்டுக்கு கூட வழியின்றி தினம்தினம் அவதி பட்டு வருகின்றனர்.
எனவே ரெயில் சேவை எப்போது தொடங்கும்? எப்போது சொந்த ஊர்களுக்கு செல்லலாம்? என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு தமிழ்நாட்டுக்கு ஒரு ரெயில் கூட இல்லை என்ற அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்து உள்ளது.
மற்ற மாநிலங்களை போல் தமிழகத்துக்கும் ரெயில்கள் இயக்க வேண்டும் என்பதே பெரும்பாலான புலம் பெயர்ந்த மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இதற்கிடையே, நேற்று காலை 10 மணிக்கு இந்த ரெயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. அடுத்த 2 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 25 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன. இவை 2 லட்சத்து 90 ஆயிரத்து 510 பயணிகள் பயணிப்பதற்கான டிக்கெட்டுகள் ஆகும்.
முன்பதிவு தொடங்கிய 2½ மணி நேரத்தில், 4 லட்சம் பயணிகள் பயணிப்பதற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதாக ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்தார்.
பா.ஜனதா எம்.பி. சம்பிட் பத்ராவிடம் உரையாடுகையில் அவர் மேலும் கூறியதாவது:-
பயணிகள் திரும்பி வருவதற்கும் சேர்த்து முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்துக்கு பிறகு 73 ரெயில்களில் மட்டுமே டிக்கெட்டுகள் இருந்தன.
22-ந் தேதி (இன்று) முதல், நாடு முழுவதும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பொது சேவை மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.
இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் குறிப்பிட்ட ரெயில் நிலையங்களின் கவுண்ட்டர்களிலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். அதற்கான ரெயில் நிலையங்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
மேலும் பல ரெயில்களை இயக்குவது பற்றி விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story