விமான பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - மத்திய அரசு வெளியிட்டது


விமான பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - மத்திய அரசு வெளியிட்டது
x
தினத்தந்தி 22 May 2020 5:00 AM IST (Updated: 22 May 2020 4:50 AM IST)
t-max-icont-min-icon

25-ந் தேதி விமான போக்குவரத்து தொடங்குவதையொட்டி, பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

புதுடெல்லி, 

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில், வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என்று அந்த துறையின் மந்திரி ஹர்தீப் சிங் பூரி நேற்றுமுன்தினம் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, பயணிகளுக்கான சில வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் நேற்று வெளியிட்டது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

* விமானம் புறப்படுவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாகவே பயணிகள் விமான நிலையத்துக்கு வந்துவிட வேண்டும்.

* அடுத்த 4 மணி நேரத்துக்குள் பயணம் செய்ய இருப்பவர்கள் மட்டுமே விமான நிலைய கட்டிடத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

* நகரத்தில் இருந்து வரும் பயணிகள் விமான நிலைய வளாகத்துக்குள் நுழைவதற்கு முன்னதாகவே, குறிப்பிட்ட இடத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் உடல் வெப்பத்தை கண்டறியும் பகுதி வழியாக பரிசோதனை செய்து விட்டு வரவேண்டும்.

* பயணிகள் விமான நிலைய கட்டிடத்துக்குள் நுழையும் முன் அவர்களுடைய பைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

* விமான பயணிகள் அனைவரும் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலியை தங்கள் செல்போனில் பதவிறக்கம் செய்து இருக்க வேண்டும். 14 வயதுக்கு குறைவான பயணிகளுக்கு இது கட்டாயம் அல்ல. விமான நிலைய கட்டிடத்தில் நுழைவு வாயிலில் தொழில் பாதுகாப்பு படையினர் பயணிகளிடம் சோதனை நடத்தி இதை உறுதி செய்ய வேண்டும்.

* கார்கள் நிறுத்தும் இடத்தில் கூட்டம் சேராமல் இருப்பதையும், சமூக இடைவெளி பின்பற்றப்படுவதையும் போக்குவரத்து போலீசாரும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உறுதி செய்ய வேண்டும்.

* வருகை மற்றும் புறப்பாடு பகுதிகளில் பெட்டி, பைகளை கொண்டு செல்ல டிராலிகள் (தள்ளுவண்டிகள்) பயன்படுத்துவதை ஊக்குவிக்கக்கூடாது. உண்மையான காரணங்களுக்காக டிராலிகள் வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் பயணிகளுக்கு மட்டுமே டிராலிகள் வழங்கப்படும்.

* கூட்ட நெருக்கடி ஏற்படுவதை தடுக்க விமான நிலைய கட்டிடத்தின் அனைத்து நுழைவு வாயில்களையும் திறந்து வைக்க வேண்டும்.

* விமான நிலைய கட்டிடத்தில் உள்ள தரை விரிப்புகளை சோடியம் ஹைப்போகுளோரைடு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

* கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளை தேவைப்படும் பயணிகளுக்கு மட்டும் வழங்க வேண்டும்.

குளிர்சாதன வசதி கூடாது

* விமான நிலையத்தில் உள்ள உணவு, குளிர்பானம் மற்றும் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திறக்கப்படவேண்டும்.

* விமான நிலைய கட்டிடத்தில் குளிர்சாதன வசதியை பயன்படுத்தாமல், காற்றோட்டத்துக்கு ஜன்னல்களை பயன்படுத்த வேண்டும்.

* விமானத்துக்குள் பயணிகளை அனுப்பும் போது, இருக்கை எண்களின் அடிப்படையில் குழுக்களாக அனுப்ப வேண்டும். விமானத்துக்குள் ஒருவரை யொருவர் கடந்து செல்வதை தடுக்க இது உதவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், முதல் நாளான 25-ந் தேதி மூன்றில் ஒரு பங்கு விமானங்கள் இயக்கப்படும் என்றும், கொரோனா பாதிப்பு காலத்தில் அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கட்டண நிர்ணயத்தை விமான நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. விமானம் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக, பயணிகளை அதன் உள்ளே அனுப்பும் பணி தொடங்கும் என்றும், 20 நிமிடத்துக்கு முன்னதாக நுழைவு வாயில் (போர்ட்டிங் கேட்) மூடப்பட்டுவிடும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் ஒரேயொரு கைப்பையை மட்டும் வைத்துக் கொள்ள பயணிக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், விமான நிறுவனங்கள் விமானத்தில் பயணிகளுக்கு உணவு எதையும் வழங்கக்கூடாது என்றும் அதில் கூறப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானநிலையங்களை இந்திய விமானநிலையங்கள் ஆணையம் நிர்வகிக்கிறது. டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் விமான நிலையங்களை தனியார் நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன.

இதற்கிடையே விமானம் பறக்கும் நேரத்தின் அடிப்படையில் விமான கட்டணம் 7 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு இருப்பதாக விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி நேற்று கூறினார். அப்போது, விமான பயண நேரம் 40 நிமிட நேரம் என்றால் ஒரு கட்டணம் விதிக்கப்படும். அந்த வகையில் 40 முதல் 1 மணி நேரத்துக்கு 2-வது வகையாகவும், 1 முதல் 1½ மணி நேரத்துக்கு 3-வது வகையாகவும், 1½ முதல் 2 மணி நேரத்துக்கு 4-வது வகையாகவும், 2 முதல் 2½ மணி நேரத்துக்கு 5-வது வகையாகவும், 2½ முதல் 3 மணி நேரத்துக்கு 6-வது வகையாகவும், 3 முதல் 3½ மணி நேரத்துக்கு 7-வது வகையாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

உதாரணத்துக்கு டெல்லி- மும்பை விமான கட்டணம் குறைந்தபட்சம் ரூ.3,500 ஆகவும், அதிகபட்சம் ரூ.10 ஆயிரமாகவும் இருக்கும் என்றார். இந்த புதிய கட்டண விகிதம் அடுத்த 3 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

முழுஅளவில் விமான போக்குவரத்து எப்போது தொடங்கும் என்று தற்போது தன்னால் தெரிவிக்க இயலாது கூறிய ஹர்தீப் சிங் பூரி, பயணியின் செல்போனில் ஆரோக்கிய சேது செயலி இல்லை என்றால், அது தொடர்பான விவரத்தை எழுதிக் கொடுத்துவிட்டு விமானத்தில் அவர் பயணிக்கலாம் என்றும், அவர் தடுத்து நிறுத்தப்படமாட்டார் என்றும் கூறினார். அப்போது உடன் இருந்த விமான போக்குவரத்து துறை செயலாளர் பி.எஸ்.கரோலா கூறுகையில், 40 சதவீத இருக்கைகள் நடுத்தர கட்டணத்தில் விற்பனை செய்யப்படும் என்றார்.

Next Story