கேரள மாநிலத்தில் உள்நாட்டு விமான பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் கட்டாயம்
கேரள மாநிலத்தில் உள்நாட்டு விமான பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் உள்நாட்டு, வெளிநாட்டு விமான போக்குவரத்து முடக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளில் சிக்கித்தவிக்கிற இந்தியர்களை மீண்டும் தாய்நாட்டில் கொண்டு வந்து சேர்ப்பதற்காக ‘வந்தே பாரத்’ திட்டத்தின்கீழ் வெளிநாடுகளுக்கு விமானங்களை அனுப்பி மத்திய அரசு மீட்டு வருகிறது.
இந்த நிலையில் 25-ந் தேதி உள்நாட்டு விமான போக்குவரத்து மீண்டும் தொடங்க இருக்கிறது. இதற்கான அறிவிப்பினை மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் குறுகிய விமான பயணங்களின்போது, தனிமைப்படுத்துதல் நடவடிக்கைக்கு சிவில் விமான போக்குவரத்து துறை ஆதரவாக இல்லை. ஆனால் அசாம் மாநிலத்திற்கு வருகிற விமான பயணிகளுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை, அந்த மாநில அரசு கட்டாயம் ஆக்கி உள்ளது.
இந்த நிலையில், கேரளாவிலும் உள்நாட்டு விமான பயணிகளுக்கு சுய தனிமைப்படுத்துதல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அந்த மாநில சுகாதார மந்திரி ஷைலஜா கூறியதாவது:-
கேரளாவுக்கு வரும் உள்நாட்டு விமான பயணிகள், கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு விதிமுறைகளின்படி கடுமையான வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்த வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை. பெரும்பாலான மக்கள் நாட்டின் முக்கியமான கொரோனா ‘ஹாட்ஸ்பாட்’டுகளில் (தீவிர தொற்றுப்பகுதி) இருந்து வருவார்கள். சுகாதாரத்துறை மற்றும் உள்ளூர் உள்ளாட்சி அமைப்புகள் தவிர்த்து, கேரள மக்களும் மாநிலத்துக்கு திரும்புகிற ஒவ்வொருவரையும் கட்டாயம் வீட்டு தனிமைப்படுத்துதலின்கீழ் வைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் மக்கள் வருகை தொடரும் என்பதால் வரும்நாட்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கும். நாம் அவர்கள் வருவதை தடுக்க முடியாது. அவர்கள் நமது சகோதர, சகோதரிகள். அவர்கள் அங்கு கஷ்டத்தை அனுபவித்துள்ளனர். நாம் இங்கு வருகிற அவர்களின் உயிரைக்காப்பாற்ற வேண்டும். இங்கு இருப்பவர்களையும் காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story