இந்தியாவின் மூத்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்


இந்தியாவின் மூத்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 25 May 2020 3:41 PM IST (Updated: 25 May 2020 3:41 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் மூத்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவின் மூத்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் (வயது 96).  பஞ்சாபின் ஜலந்தர் நகரில் ஹரிபூர் கல்சா என்ற கிராமத்தில் கடந்த 1924ம் ஆண்டு அக்டோபர் 10ந்தேதி பிறந்த சிங், சிறுவயது முதலே விளையாட்டில் தீவிர ஆர்வம் செலுத்தியவர்.  இதனால் இந்திய தேசிய ஆக்கி அணியில் இணைந்து விளையாட தொடங்கினார்.

அவர் கடந்த 1952ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஆக்கி இறுதியாட்டத்தில் 5 கோல்கள் அடித்து அணி வெற்றி பெற உதவினார்.  தங்க பதக்கத்திற்கான அந்த ஆட்டத்தில் இந்திய அணி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.  இது தவிர 1948, 1956 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றார்.  துணை கேப்டன், கேப்டன் என அடுத்தடுத்த நிலைக்கு சென்றார்.  அவருக்கு இந்திய அரசு கடந்த 1957ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

கடந்த சில வாரங்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பஞ்சாபின் மொகாலி நகரில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் கடந்த 8ந்தேதி அனுமதிக்கப்பட்டார்.  தொடர்ந்து 2 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை காலமானார்.  இதனை அவரது பேரன் கபீர் உறுதி செய்துள்ளார்.  சிங்கிற்கு சுஷ்பீர் என்ற மகளும், கன்வால்பீர், பரன்பீர் மற்றும் குர்பீர் என 3 மகன்களும் உள்ளனர்.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.  அதில், பத்மஸ்ரீ பல்பீர் சிங்ஜி அவர்கள், நினைவுகூரத்தக்க வகையிலான விளையாட்டு திறமையால் நினைவில் கொள்ளப்படுவார்.  நாட்டுக்கு பெருமையும், புகழையும் அவர் கொண்டு வந்து சேர்த்துள்ளார்.

சந்தேகமில்லாமல் ஒரு திறமையான ஆக்கி வீரர்.  சிறந்த ஒரு கேப்டனாகவும் முத்திரை பதித்துள்ளார்.  அவரது மறைவால் வேதனைப்படுகிறேன்.  அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் நலம் விரும்பிகளுக்கும் எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Next Story