டெல்லியில் பாகிஸ்தான் விசா பிரிவில் 2 உளவாளிகள் சிக்கினர்; நாட்டை விட்டு வெளியேற உத்தரவு
டெல்லியில் பாகிஸ்தான் தூதரக விசா பிரிவில் 2 உளவாளிகள் பிடிபட்டனர், 24 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
நாட்டில் உளவு பார்த்ததற்காக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இரண்டு பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தூதரகத்தின் விசா பிரிவில் பணிபுரியும் அபீத் உசேன் மற்றும் தாஹிர்கான் ஆகியோரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இருவரும் பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் அல்லது ஐ.எஸ்.ஐ.யில் பணிபுரிந்தனர் மற்றும் போலி அடையாள ஆவணங்களை பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்த இரண்டு அதிகாரிகளும் தங்கள் அந்தஸ்துடன் பொருந்தாத செயல்களில் ஈடுபடுவதற்காக தகுதி இல்லாதவர்கள் என்று அறிவித்து, இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு எதிராக பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து வலுவான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது.
பாகிஸ்தானின் தூதர பணியின் எந்தவொரு உறுப்பினரும் இந்தியாவுக்கு விரோதமான செயல்களில் ஈடுபடக்கூடாது அல்லது அவர்களின் தூதரக அந்தஸ்துடன் பொருந்தாத வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story