கொரோனா சிகிச்சைக்கு “ரெம்டெசிவர்” மருந்தினை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல்
கொரோனாவுக்கு சிகிச்சைக்கு ரெம்டெசிவர் மருந்தினை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி,
உலகை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து பரிசோதனைகள் முடித்து சந்தைக்கு கொண்டு வருவதில் பல நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
அந்த வகையில் ரஷியாவில் உள்ள பிரபல மருந்து நிறுவனங்களான பயோகாட் மற்றும் ஜெனிரியம் ஆகியவை கூட்டாக தடுப்பூசிகளை உருவாக்கி உள்ளன.
தற்போது கொரோனா சிகிச்சையில் பல்வேறு மருந்துகள் கையாளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவுக்கான சிகிச்சையில் ரெம்டெசிவரை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் கொரோனாவுக்கான சிகிச்சையின் போது ரெம்டெசிவர் மூலம் நல்ல பலன் கிடைத்ததையடுத்து இந்த மருந்திற்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி உள்ளது.
ஜூன் 1 முதல் கொரோனா அவசர சிகிச்சையின் போது நோயாளிக்கு நாள் ஒன்றுக்கு 5 டோசுகள் வரை இம்மருந்தினை வழங்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார். தென்கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் இந்த மருந்தினை பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தகவல்கள்படி, இந்தியாவில் 1,98,706 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் 5,598 இறப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story