கர்ப்பிணி யானை கொலை: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை - பினராயி விஜயன்


கர்ப்பிணி யானை கொலை: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை - பினராயி விஜயன்
x
தினத்தந்தி 3 Jun 2020 8:26 PM IST (Updated: 3 Jun 2020 8:26 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் கர்ப்பிணி யானையை கொலை செய்வதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புரம்  சைலண்ட் பள்ளத்தாக்கின் அருகே 15 வயதான கர்ப்பிணி யானை ஒன்று காட்டை விட்டு வெளியேறி, அருகிலுள்ள கிராமத்துக்கு உணவு தேடிச் சென்றது. இதனைப் பார்த்து பயந்த மக்கள், தங்களுக்கும் தங்கள் ஊருக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என எண்ணி, யானையை விரட்ட அன்னாசிப்பழத்துக்குள் வெடிமருந்தை நிரப்பி யானைக்கு உணவாக அளித்துள்ளனர். மனிதர்கள் வழங்கிய உணவை அந்த யானை சாப்பிட்டதும் வாயில் வெடி மருந்து வெடித்தது. இதனால் அந்த கர்ப்பிணி யானைக்கு தாள முடியாத வலி ஏற்பட்டது. இதையடுத்து அந்த கர்ப்பிணி யானை தண்ணீரில் நின்றபடியே தனது உயிரை மாய்த்துவிட்டது.

இதயத்தையே நொறுக்கும் இந்த சம்பவத்தை நிலம்பூரில் உள்ள வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்ணன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், யானை ஒன்று கிராமத்தில் உணவு தேடி அலைந்தது. அப்போது மனிதர்களின் சுயநலத்தை அறியாத யானை அவர்கள் வெடிமருந்தை மறைத்து கொடுத்த அன்னாசி பழத்தை வாங்கியது.

கர்ப்பிணியான அந்த யானை வயிற்றில் உள்ள குட்டிக்காக அந்த உணவை நம்பி வாங்கியது. அந்த பழத்தை வாயில் போட்டு உண்ணத் தொடங்கியது. அப்போது அந்த பழத்தில் இருந்த வெடிமருந்து வெடிக்கத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த தாய் யானை, தன்னை பற்றி கவலைப்படாமல் தன் வயிற்றில் இன்னும் 18 அல்லது 20 மாதங்களில் பிறக்கவுள்ள குட்டியை நினைத்து கவலைப்படத் தொடங்கியது.

வெடி வெடித்தவுடன் வாயில் பயங்கர காயம் ஏற்பட்டது. உடனே பசி மற்றும் வலியால் அந்த யானை அங்கும் இங்கும் சுற்றியது. எனினும் அந்த யானை மக்கள் மீது கோபம் கொள்ளவில்லை. யாரையும் தாக்கவில்லை, யாருடைய வீட்டையும் சேதப்படுத்தவில்லை. வலி தாள முடியாமல் நேராக வெள்ளியாறு ஆற்றில் போய் நின்றது.

தண்ணீரில் தனது வாயையும் தும்பிக்கையையும் மூழ்கடித்தபடி நின்றிருந்தது. பார்ப்பதற்கே வேதனையாக இருந்தது. வாயில் புண் ஏற்பட்டபோது அதில் மற்ற பூச்சிகள் வந்து கடிப்பதை தவிர்க்கவே அது தண்ணீரில் நின்றிருக்கலாம். உடனே இரு ஆண் யானைகளை வனத்துறையினர் வரவழைத்து அதை கரைக்கு கொண்டு வர முயற்சித்தோம். ஆனால் அதை மீட்பதற்குள் நின்றபடியே உயிரைவிட்டது. இந்த சம்பவம் கடந்த 27ஆம் தேதி நடந்தது.

அதை பார்த்த போது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அழைத்து வரப்பட்ட யானைகளும் மிக வேகமாக அங்கு என்ன நடந்தது என்பதை உணர்ந்து கண்ணீரை சுரந்தன. இந்த யானைகளின் அழுகையாலும் மனித இனத்தின் சுயநலத்தை எதிர்த்தும் ஆற்று நீரே கொதிக்க தொடங்கியதாக நான் உணர்ந்தேன்.

அந்த யானை கர்ப்பமாக இருந்தது என்பதை பிரேத பரிசோதனை செய்த போதுதான் எங்களுக்கு தெரியவந்தது. அந்த யானையை நாங்கள் இறுதியாக அடக்கம் செய்தோம். ஒரு மனிதனாக அந்த சகோதரிக்கு (யானை) என்னால் மன்னிப்பு மட்டுமே கேட்க முடியும் என அந்த வனத்துறை அதிகாரி கண்ணீருடன் விவரித்திருந்தார்.

இந்நிலையில் கர்ப்பிணி யானையை கொலை செய்வதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த படுபாதக செயலை செய்தவர்கள் கைது செய்யப்படுவார்கள்.  இந்த வழக்கை வனத்துறை விசாரித்து வருகிறது. குற்றவாளிகள் மீது வனத்துறை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. என அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


Next Story