நிசர்கா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண நிதியாக ரூ. 100 கோடி ஒதுக்கீடு - உத்தவ் தாக்கரே


நிசர்கா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண நிதியாக ரூ. 100 கோடி ஒதுக்கீடு - உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 5 Jun 2020 5:30 PM IST (Updated: 5 Jun 2020 5:30 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் நிசர்கா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண நிதியாக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்து உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

மும்பை,

அரபிக்கடலில் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக மாறி நேற்று முன்தினம் சுமார் 110 கி.மீ. வேகத்தில் ராய்காட் மாவட்டம் அலிபாக் பகுதியில் கரையை கடந்தது. ‘நிசர்கா' என பெயரிடப்பட்டு இருந்த இந்த புயலால் ராய்காட் மாவட்டம் பலத்த சேதத்தை சந்தித்தது. இந்த மாவட்டத்தில் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. வீட்டின் மேற்கூரைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டன.

இதேபோல அருகே உள்ள மும்பை, தானே, பால்கர், ரத்னகிரி, சிந்துதுர்க் ஆகிய கடலோர மாவட்டங்களும் சூறாவளி காற்று மற்றும் மழையால் சேதத்தை சந்தித்தன. புனேயில் பலத்த மழை பெய்தது.

மராட்டியத்தின் கடலோர மாவட்டங்களை புரட்டி எடுத்த நிசர்கா புயல் வலுவிழந்து நேற்று அதிகாலை மேற்கு விதர்பா மாவட்டங்களை நோக்கி சென்றது. பின்னர் மேலும் வலுவிழந்து கிழக்கு- வடமேற்கு திசையை நோக்கி சென்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதற்கிடையே புயலால் சூறாவளி காற்று மற்றும் மழை காரணமாக கடந்த 2 நாட்களாக 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இன்று ராய்காட் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார். மேலும் ராய்காட் பகுதியில் புயல் சேதங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அவசர நிவாரண நிதியாக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

புயல் சேதங்களை பார்வையிட்ட முதல்-மந்திரியுடன், மந்திரிகள் ஆதித்யா தாக்கரே, அஸ்லம் ஷேக் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

முன்னதாக, விவசாயிகளுக்கும், கிராம மக்களுக்கும் விரைவான உதவி வழங்கப்படுவதை உறுதி செய்ய, இரண்டு நாட்களுக்குள் புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். புயலால் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிதி வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Next Story