கேரள சம்பவத்தை தொடர்ந்து கோதுமை மாவு உருண்டைக்குள் வெடி வைத்து உணவு கொடுத்த நபர்: வாய் சிதைந்த கர்ப்பிணி பசு


கேரள சம்பவத்தை தொடர்ந்து கோதுமை மாவு உருண்டைக்குள் வெடி வைத்து உணவு கொடுத்த நபர்: வாய் சிதைந்த கர்ப்பிணி பசு
x
தினத்தந்தி 6 Jun 2020 9:28 PM IST (Updated: 6 Jun 2020 9:28 PM IST)
t-max-icont-min-icon

கேரளா சம்பவத்தை தொடர்ந்து இமாச்சல பிரதேசத்திலும், கர்ப்பிணி பசுவுக்கு கோதுமை மாவு உருண்டைக்குள் வெடிமருந்து வைத்து கொடுத்ததில் அதன் வாய் சிதைந்து காயம் அடைந்தது.

சிம்லா,

கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியில் பசியால் சுற்றி திரிந்த கர்ப்பிணி யானைக்கு சிலர் அன்னாசி பழத்துக்குள் வெடி மருந்துகளை வைத்து சாப்பிட கொடுத்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.   இந்த பழங்களை யானைக்கு தந்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்த யானையின் மரணத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு குரல்களும் கண்டனங்களும் வெளியாகின.

இந்நிலையில் தற்போது இமாச்சல பிரதேசத்திலும் இது போல ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.  பிலாஸ்பூர் மாவட்டம் ஜன்துட்டா பகுதியில், கர்ப்பிணி பசுவுக்கு, கோதுமை மாவு உருண்டைக்குள், வெடி வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. அதனை கடித்த பசுவின் வாய் சிதைந்து படுகாயமடைந்தது. இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பசுவின் உரிமையாளர் குர்தயால் சிங் காயமடைந்த கர்ப்பிணி பசுவின் வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றியபோது வெளிச்சத்திற்கு வந்தது.

இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மே 26-ம் தேதி நடைபெற்றதாக கூறப்படுகிறது.

பசுவின் உரிமையாளர் குர்தயால் சிங் இந்த கொடூரமான செயலுக்கு தனது அண்டை வீட்டார் தான் காரணம் என குற்றம்சாட்டி உள்ளார்.

காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) தேவகர் சர்மா கூறுகையில், பசுவுக்கு ‘ஆலு வெடிகுண்டு’ என்று அழைக்கப்படும் வெடிக்கும் பட்டாசு வழங்கப்பட்டுள்ளது. என்றும், விலங்குகள் மீதான வன் கொடுமையைத் சட்டத்தின் பிரிவு 286 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் பசுவின் உரிமையாளர் மற்றும் பிற நபர்களால் பெயரிடப்பட்ட முக்கிய குற்றவாளி குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

காட்டு விலங்குகளை, முக்கியமாக நீல காளைகள் மற்றும் காட்டுப்பன்றிகளைக் கொல்ல, தங்கள் பயிர்களைப் பாதுகாக்க பட்டாசுகளை கோதுமை மாவு உருண்டைக்குள், வெடி  வைப்பது விவசாயிகளிடையே ஒரு பொதுவான நடைமுறையாகும் என்று வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story