80 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் மத வழிபாட்டுத் தலங்கள் இன்று திறக்கப்பட்டன


80 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் மத வழிபாட்டுத் தலங்கள் இன்று திறக்கப்பட்டன
x
தினத்தந்தி 8 Jun 2020 11:13 AM IST (Updated: 8 Jun 2020 3:13 PM IST)
t-max-icont-min-icon

80 நாட்களுக்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுக்கு பின், மத வழிபாட்டுத் தலங்கள் இன்று திறக்கப்பட்டன.

புதுடெல்லி

கொரோனா பாதிப்பால் போடப்பட்ட 5 வது கட்ட ஊரடங்கில் நாடு முழுவதும் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி உணவங்களில் அமர்ந்து உணவு உண்பது, மால்கள் இயங்க, மத வழிப்பாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி இன்று 80 சதவிகித தலங்கள் திறக்கப்பட்டுகின்றன.மத்திய அரசின் வழிக்காட்டுதல்களின் கீழ் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி மத வழிபாட்டுத் தலங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், சிலைகளை தொடக் கூடாது, புனித நூல்களுக்கு அனுமதி கிடையாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

80 நாட்களுக்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுக்கு பின், மத வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கோரக்நாத் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டார் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக மூடப்பட்டு இருந்த வழிபாட்டு தலங்கள் முதல்வர் நாராயணசாமி உத்தரவை தொடர்ந்து இன்று திறக்கப்பட்டது. குறிப்பாக கடந்த 80 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டு இருந்த பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் பகவான் ஆலயம் இன்று திறக்கப்பட்டது.

சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் தரிசனம் செய்ய வட்டமிடபட்டுள்ளது, பக்தர்களுக்கு கிருமி நாசினி கொடுப்பது, தெர்மல் கருவி பரிசோதனை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் அர்ச்சனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தரிசனம் மட்டுமே செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 'நலன்' குளத்தில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு குளத்தின் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. 10 வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகளும், 60 வயதிற்கு மேல் உள்ள முதியவர்களும் கோவிலுக்கு வருவதை தவிர்க்கலாம் என்றும், வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநில பக்தர்களுக்கு கோவில் வருவதற்கு தற்போதைக்கு அனுமதி கிடையாது என்றும் காரைக்கால் துணை ஆட்சியர் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டாலும் குறைவான அளவிலான பக்தர்களே இன்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆந்திர மாநில அரசின் உத்தரவு அடிப்படையில் இன்று துவங்கி இரண்டு நாட்கள் பரிசோதனை அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கும்,10 ம் தேதி உள்ளூர் பக்தர்களுக்கும் நாளொன்றுக்கு 6000 பேர் என்ற அடிப்படையில் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

அதன்பின் வரும் 11-ம் தேதி முதல் வெளியூர் பக்தர்களுக்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏழுமலையான் கோவில், சாமி தரிசன வரிசைகள், லட்டு கவுண்டர் ஆகியவை உள்ளிட்ட இடங்களில் இடைவெளியை கடைபிடித்து 6 அடி தூரத்திற்கு ஒருவர் நிற்கும் வகையில் ரேடியம் ஸ்டிக்கர்கள் தரையில் பதிக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஏழுமலையான் கோவில், அன்னதான கூடம் ஆகியவை உள்ளிட்ட இடங்களில் கால் விரல்களால் இயக்கக்கூடிய குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.

 80 நாட்களுக்கு பின் ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருப்பதால் ஏழுமலையான் கோவிலை சுமார் இரண்டரை டன் எடையுள்ள பல்வேறு வகையான உள்ளூர் மலர்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மலர்கள் ஆகியவற்றால் அலங்கரித்துள்ளனர்.ஒவ்வொரு நாளும் 50 ஆயிரத்தில் துவங்கி ஒரு லட்சம் வரையிலான பக்தர்கள் சாமி கும்பிடும் ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் சில நாட்கள் மணிக்கு 500 பேர் என்ற கணக்கில் 6000 பக்தர்கள் மட்டுமே ஏழுமலையானை வழிபட உள்ளனர். நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் டிக்கெட்டுகள் என்ற கணக்கில் இன்று முதல் ஆன்லைனில் தேவஸ்தான நிர்வாகம் 300 ரூபாய் டிக்கெட்டுகளை வெளியிடுகிறது.

இது தவிர திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் பக்தர்கள் தினமும் இலவச தரிசனத்திற்கான 3 ஆயிரம் டிக்கெட்டுகளை 11-ஆம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஆந்திர மாநில அரசின் உத்தரவு அடிப்படையில் இன்று துவங்கி இரண்டு நாட்கள் பரிசோதனை அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கும்,10 ம் தேதி உள்ளூர் பக்தர்களுக்கும் நாளொன்றுக்கு 6000 பேர் என்ற அடிப்படையில் சாமி தரிசனம் அளிக்கப்படுகிறது.

இதேபோல் கேரள மாநிலத்தில் உள்ள கோவில்கள் அனைத்தும் நாளை (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகின்றன. மாதம் 5 நாட்கள் திறக்கப்படும் சபரிமலை அய்யப்பன் கோவில் வருகிற 14-ந்தேதி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை திறப்பதற்கான தடை நீடிக்கிறது.


Next Story