காஷ்மீரில் 2 வாரங்களில் 22 பயங்கரவாதிகள் சுட்டு கொலை


காஷ்மீரில் 2 வாரங்களில் 22 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
x
தினத்தந்தி 8 Jun 2020 2:52 PM IST (Updated: 8 Jun 2020 2:52 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த 2 வாரங்களில் 6 முக்கிய தளபதிகள் உள்பட 22 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

புதுடெல்லி,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்கள் மீது பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து திடீர் தாக்குதல் நடத்துவதும், பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் அதிரடி தாக்குதலில் ஈடுபடுவதும் வாடிக்கையாகி விட்டது.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பிஞ்சோரா என்ற கிராமத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று அதிகாலை 3 மணி முதல் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.  இந்த மோதல் 4 மணிநேரம் வரை நீடித்தது.

இந்நிலையில், காஷ்மீர் டி.ஜி.பி. தில்பாக் சிங் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த 2 வாரங்களில் நடந்த 9 வெவ்வேறு அதிரடி நடவடிக்கைகளில், 6 முக்கிய தளபதிகள் உள்பட 22 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

கடந்த 2 நாட்களில் ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் 9 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  அவர்களில் 3 பேர் முக்கிய தளபதிகள்.  குடிமக்களை கொலை செய்தது, போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்களை நடத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர்கள் மீது பதிவாகி உள்ளன.

இந்த ஆண்டில் நடத்தப்பட்ட 36 அதிரடி நடவடிக்கைகளில் 88 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.  பயங்கரவாத அமைப்புகளின் கூட்டாளிகள் 40 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.

Next Story