பிரதமருக்கான 2 விசேஷ விமானங்கள் செப்டம்பர் மாதம் வருகை
ஏவுகணை தாக்குதலை தடுக்கும் சாதனத்துடன் பிரதமருக்கான 2 விசேஷ விமானங்கள் செப்டம்பர் மாதம் வர உள்ளன.
புதுடெல்லி,
ஏவுகணை தாக்குதலை தடுக்கும் சாதனங்களுடன் பிரதமர் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்கள் பயணிக்கும் 2 விசேஷ விமானங்கள், செப்டம்பர் மாதம் ஏர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் போன்ற மிக மிக முக்கிய பிரமுகர்கள், ஏர் இந்தியாவின் பி747 ரக விமானங்களில் பயணிக்கிறார்கள். ‘ஏர் இந்தியா ஒன்‘ என்று அழைக்கப்படும்் இந்த விமானங்களை ஏர் இந்தியா விமானிகள் இயக்குகிறார்கள்.
மிக முக்கிய பிரமுகர்கள் பயணிக்காதபோது, இவ்விமானங்கள், ஏர் இந்தியா வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், பிரதமர் மோடி உள்ளிட்ட மிக மிக முக்கிய பிரமுகர்கள் பயணிப்பதற்கான பி777 ரகத்தை சேர்ந்த 2 விசேஷ விமானங்களை ‘போயிங்‘ நிறுவனம் வடிவமைத்து வருகிறது.
இந்த விமானங்கள், ஜூலை மாதம் ஏர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், கொரோனா காரணமாக. விமானங்களை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், செப்டம்பர் மாதத்துக்குள் ஏர் இந்தியாவிடம் போயிங் ஒப்படைக்கும் என்று மத்திய அரசு உயர் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இந்த விமானங்களில், ஏவுகணை தாக்குதலை தடுக்கும் சாதனங்கள் மற்றும் சுய பாதுகாப்பு உடைகள் இடம்பெற்று இருக்கும்.
பரந்த தோற்றத்துடன் கூடிய இவ்விமானங்களை ஏர் இந்தியா விமானிகளுக்கு பதிலாக இந்திய விமானப்படை விமானிகள் இயக்குவார்கள். இவற்றை ஏர் இந்தியா என்ஜினீயரிங் சேவைப்பிரிவு பராமரிக்கும்.
Related Tags :
Next Story