லடாக் எல்லையில் இருந்து 2.5.கி.மீ தூரம் வரை பின் வாங்கியது சீன ராணுவம்


லடாக் எல்லையில் இருந்து 2.5.கி.மீ தூரம் வரை பின் வாங்கியது சீன ராணுவம்
x
தினத்தந்தி 9 Jun 2020 6:00 PM IST (Updated: 9 Jun 2020 6:45 PM IST)
t-max-icont-min-icon

இருநாட்டு அதிகாரிகள் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம்2.5.கி.மீ தூரம் தூரம் பின் வாங்கியது.

புதுடெல்லி,

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது.

இந்த நிலையில், லடாக் எல்லையில் பங்கோங் சோ ஏரி பகுதியில் சீன வீரர்கள் கடந்த மாதம் 5 மற்றும் 6-ந் தேதிகளில் அத்துமீறி நுழைய முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளும், மோதலும் ஏற்பட்டது. இதேபோன்ற சம்பவம் கடந்த மாதம் 9-ந் தேதி வடக்கு சிக்கிம் பகுதியிலும் நடந்தது.

லடாக் எல்லைப்பகுதியில் சீன ராணுவம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை குவித்து இருக்கிறது. எல்லைப் பகுதியில் இந்திய வீரர்கள் வழக்கமான ரோந்து பணியை மேற்கொள்வதற்கும் சீனா இடையூறு செய்கிறது. இதைத்தொடர்ந்து, சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவும் அங்கு படைகளை அனுப்பி உள்ளது.

இதனால் எல்லையில் பங்கோங் சோ ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக் ஆகிய பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

இந்த பதற்றத்தை தணிப்பதற்காக அந்த பகுதியில் உள்ள இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் ஏற்கனவே 12 முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். மேலும் மேஜர் ஜெனரல்கள் மட்டத்திலும் 3 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் உடன்பாடு ஏற்படாமல் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

இதைத்தொடர்ந்து, எல்லையில் நிலவும் மோதல் போக்குக்கு தீர்வு காண்பது தொடர்பாக உயர் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை 06-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, எல்லை பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண ஒப்புக்கொள்ளப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், லடாக் எல்லையில் இருந்து இரு நாட்டு வீரர்களும் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம் 2.5 கி.மீ., தூரம் திரும்பி சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கிழக்கு லடாக்கின் பல்வேறு பகுதிகளில்  சீன ராணுவம் பின் வாங்கியது.

பதற்றத்தை தணிக்கும் பொருட்டு இருநாட்டு அதிகாரிகள் தலைமையில் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

கடந்த சில வாரங்களாக லடாக் எல்லைப்பகுதியில் சீனா ராணுவத்தை குவித்திருந்ததால் பதற்றம் நிலவியது.


Next Story