கொரோனா லாக் டவுன்: ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் கூடுதலாக 58 விமானங்கள் இயக்க மத்திய அரசு முடிவு


கொரோனா லாக் டவுன்: ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் கூடுதலாக 58 விமானங்கள் இயக்க மத்திய அரசு முடிவு
x
தினத்தந்தி 10 Jun 2020 5:30 PM IST (Updated: 10 Jun 2020 5:30 PM IST)
t-max-icont-min-icon

லாக் டவுன் காரணமாக வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மேலும் 58 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உலக நாடுகள் திடீரென ஊரடங்கை அறிவித்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்தையும் ரத்து செய்தன. அதனால், வேலை, சுற்றுலா மற்றும் மருத்துவத்துக்காக வெளிநாடுகளுக்கு சென்ற பலரும் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதி அடைந்து வந்தனர்.

இவ்வாறு பிற நாடுகளில் சிக்கித் தவிக்கும் தங்கள் நாட்டு மக்களை மீட்பதற்காக பல்வேறு நாடுகளும் சிறப்பு விமானங்களை இயக்கி வருகின்றன. இந்தியாவும் ‘வந்தே பாரத்’ என்ற திட்டம் மூலம் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் பிற நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வந்து கொண்டிருக்கிறது.

இந்தநிலையில் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூலம் கடந்த மே 7-ம் தேதி முதல் இதுவரை 1.07 லட்சம் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதுவரை முதல்கட்ட வந்தே பாரத் திட்டம் முடிந்து 2-வது கட்டம் நடந்து வருகிறது. இந்த 2-வது கட்டம் வரும் 13-ம் தேதி வரை இருக்கும்.

முதல்கட்ட வந்தே பாரத் மிஷன் திட்டம்  மே 7-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் 12 நாடுகளில் இருந்து 15 ஆயிரம் இந்தியர்கள் கப்பல், விமானம் மூலம் தாயகம் அழைத்துவரப்பட்டார்கள்.

2-வது கட்ட வந்தே பாரத் திட்டம் மே 17-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை அறிவிக்கப்பட்டு பின்னர் ஜூன் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி கூறியதாவாது:

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மேலும் 58 விமானங்கள் இயக்கப்படும். தற்போது 107 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இனிமேல் 165 விமானங்கள் இயக்கப்படும். ஜூன் 30-ம் தேதி வரை இந்த விமானங்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே 3-வது கட்ட வந்தே பாரத் திட்டத்துக்காக மத்திய அரசு தீவிரமாகத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.



Next Story